`எடப்பாடி ஆட்சி கவிழும்; டி.டி.வி ஆட்சியைப் பிடிப்பார்' - ஜெயானந்த் ஆரூடம்

எடப்பாடி ஆட்சி கவிழும் என்றும் அடுத்து, டி.டி.வி.தினகரன் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் ஆரூடம் சொல்கிறார் ஜெயானந்த்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், 'போஸ்' மக்கள் பணியகத்தின் சார்பில் முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இவ்விழாவானது சத்குரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஏராளமாக அழைத்து வரப்பட்டிருந்தார்கள். ஜெயானந்துக்கு இந்த மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் ஆள் உயர மாலைகள் அணிவித்து உற்சாகப்படுத்தினார்கள்.

ஜெயானந்த்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய பிறகு, பேசிய ஜெயானந்த், 'இந்த இயக்கமானது மக்களுக்குப் பணிகள் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இது அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. இந்த இயக்கத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆசி உண்டு. அரசியல் சர்ச்சைகள் அதில் தவிர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில், சிவகங்கையில்தான் முதன்முதலாக எங்கள் இயக்கத்தின் நலத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி-யில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடமுடியவில்லை. அதைக்கூட இந்த அரசால் தட்டிக்கேட்க முடியவில்லை. இந்த அரசால் இளைஞர்களுக்கு  எந்த எதிர்காலத்தையும் கொடுக்க முடியாது. 18 எம்.எல் ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். ஒருவேளை ஓ.பி.எஸ் தலைமையில் வெளியேறிய 11 எம்.ஏல்.ஏ-க்கள்மீது நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆட்சி கவிழும்'' என்று கூறினார்.

அப்போது, பத்திரிகையாளர்கள், எடப்பாடி அழைத்தால் ஒன்று சேர்வீர்களா என்று கேட்டதற்கு, அப்படியொரு வாய்ப்பு வராது. எங்கள் துணைப் பொதுச் செயலாளர் சொன்ன ஆறு அமைச்சர்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ் இருக்கிறார்கள். வரும் பொதுத்தேர்தலில் மக்கள் செல்வாக்கு டி.டி.வி.தினகரனுக்கு உண்டு. அவர்தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார். அப்போதும் எங்கள் இயக்கம், மக்கள் பிரச்னைகளை அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லும். தமிழகம் முழுவதுமாக எங்கள் அமைப்புக்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!