'அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக் கூடாது!' - காடுவெட்டி குருவை எச்சரித்த மருத்துவர்கள்

பாமக மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 28ம் தேதி திருவள்ளூரில் நடந்து முடிந்தது. ஆனால், கூட்டத்தில் காடுவெட்டி குரு மட்டும் கலந்துகொள்ளாதது பல்வேறு விதமான சலசலப்புகளை உண்டாக்கியது. குருவுக்காக அன்புமணி பேசியதுதான் அனைவரையும் மனம் உருகவைத்திருக்கிறது.

காடு வெட்டி குரு- பாமக கூட்டம்

பா.ம.க.வில் மீண்டும் ஜி.கே.மணி தலைவராகவும், வடிவேல், இராவணன் இருவரும் பொதுச்செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். கவிஞர் திலகபாமா கட்சியின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 1 லட்சம் உறுப்பினர்களை பாமகவில் இணைத்ததற்காக அன்புமணியின் கையால் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைத்திக்கு ஒரு பவுன் மோதிரம் அணிவிக்கபட்டு அவரைப் புகழ்ந்து பேசினார் அன்புமணி. காடுவெட்டு குரு கலந்துகொள்ளாதற்கு என்ன காரணம் என்று பாமகவினரிடம் பேசினோம்.

காடு வெட்டி குரு

"கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொண்டை பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார் குரு. மாதத்துக்கு ஒருமுறை அவரால் பேசமுடியாத சூழல் ஏற்படுவதால் கடந்த மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துள்ளார். மருத்துவர்கள் அவரை "எந்தக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளக் கூடாது. அதில் கலந்துகொண்டாலும் அதிர்ந்து அதிகச் சத்தத்தோடு பேசக்கூடாது" என்று அறிவுறுதியுள்ளதால் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். நீங்கள் நினைப்பதுபோல் எந்தவிதக் கருத்துவேறுபாடும் இல்லை. அதேபோல் பொதுக்குழுவில் அன்புமணியே, குரு கலந்துகொள்ளாதது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. உடல்நலம் தேறி நல்லமுறையில் என்னோடு களத்துக்கு வருவார். அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு அவசியம்  கலந்துகொள்வார் என்று குருவைப் பற்றி மனம் உருகிப் பேசியிருக்கிறார்" என்று முடித்துக்கொண்டார்கள்.

இதனிடையே அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிகளிலும் குரு கலந்துகொள்வது கிடையாது. அந்த வெற்றிடத்தை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்று வைத்தி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்று கட்சியினர் கூறுகின்றனர். அதே நேரத்தில் காடுவெட்டி குருவை ஓரங்கட்டிவிட்டு வைத்தியை அன்புமணி முன்னிறுத்துவதாக அதிக அளவில் கட்சிக்குள் பேச்சு அடிபட்டுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!