"வரும் திங்கள் வரை காத்திருப்போம் என்றார் முதல்வர்" - எடப்பாடி பழனிசாமியைத் சந்தித்த ஸ்டாலின் பேட்டி

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

“காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சியினரைப் பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்துக்கு அவமானம்” என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16- ம் தேதி தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழகத்துக்கு வழங்க நடுவர் மன்றம் நிர்ணயித்திருந்த நீரின் அளவு 192 டி.எம்.சி-யிலிருந்து 177.25 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குபடுத்தும் குழுவை ஆறு வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தத் தீர்ப்பு கர்நாடகத்துக்குச் சாதகமாகவே அமைந்தபோதிலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இதுகுறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 22-ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், அனைத்துக் கட்சி தலைவர்களும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பது குறித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்திக்க பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்று தெரிகிறது. 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தைத் தொடங்கிவைக்க வருகை தந்த பிரதமர் மோடியிடம், “காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவைத்தார். ஆனால், அதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. இதற்கு, கர்நாடகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “கர்நாடகாவும், தமிழகமும் எங்களுக்கு இருகண்கள்”  என்று நாசூக்காகக் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனாலும் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று திடீரென மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் சென்றார். அவருடன் துரைமுருகனும் சென்றார். 

சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “முதலமைச்சரிடம் இருந்துவந்த அழைப்பை ஏற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். இன்றைய சந்திப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பிரதமரிடம் அழுத்தம் தர முடிவெடுக்கப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினரைப் பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்துக்கு அவமானம். முதலமைச்சர் பழனிசாமியை, தனியாகப் பிரதமர் மோடி சந்திக்கிறார்.  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தனியாகச் சந்திக்கிறார். காவிரி நதி நீர்ப் பிரச்னை தொடர்பாகச் சட்டமன்றத்தை வரும் 8-ம் தேதி கூட்டிச் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளோம். அதற்கு, ‘வரும் திங்கள் கிழமை வரை காத்திருக்கலாம்’ என்று முதல்வர் சொல்லியுள்ளார். காவிரி விவகாரத்தில் தி.மு.க. எம்.பி-க்கள் ராஜினாமா செய்யவும் தயார் ” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!