`சாமி கும்பிடும் நேரத்தைவிட செல்போனுக்கு டோக்கன் வாங்க அதிக நேரமாகுது' - மீனாட்சியம்மன் பக்தர்கள் வேதனை

மீனாட்சியம்மன்
 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராயர் மண்டபம் மிகவும் சேதமடைந்தது. அங்கிருந்த கடைகள் சாம்பலானது. இதனால், பக்தர்கள் கவலை அடைந்தார்கள். இந்நிலையில் கோயில் பாதுகாப்பு சம்பந்தமாகக் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அதன்படி இன்று மார்ச் 3 முதல் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ''தவிர்க்க முடியாமல் செல்போன்களுடன் வரும் பக்தர்களுக்காக ஒரே நேரத்தில் 1,000 செல்போன்களை வைக்கும் வகையில் கோயிலின் வடக்கு மற்றும் மேற்குக் கோபுர நுழைவுவாயில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்புக் கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.10 வசூலிக்கப்படும்'' என்று கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்திருந்தார். இன்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் செல்போனுடன் வந்தனர். கோயிலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் ஒரு செல்போனுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

செல்போன்

''4 மணி நேரத்துக்கும் மேல் அதிகமானால் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதியால் மணியைப் பார்த்துக்கொண்டே சாமி கும்பிட வேண்டிய அவல நிலை உள்ளது. பத்து ரூபாய் என்பது அதிக கட்டணம். இதை இலவசம் ஆக்க வேண்டும். சாமி கும்பிடும் நேரத்தைவிடக் காலணியைப் பாதுகாப்பதற்கு, பேக் மற்றும் செல்போனை பத்திரப்படுத்தி டோக்கன் வாங்க அதிக நேரமாகிறது. திருவிழா காலங்களில் இந்த நிலை நீடித்தால் மிகப்பெரும் சிரமம் ஏற்படும்'' எனப் பக்தர்கள் கவலை தெரிவித்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், ''செல்போன் தடை என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஒரு செல்போனுக்கு 10 ரூபாய் என்பது அதிகப்படியானது. இதைக் குறைக்கச் சொல்லி நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்வேன்'' என தெரிவித்தார்.

மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், அதிக அளவு சிறப்பு தரிசனம் கட்டணம் வசூலிக்கும் நிலையில் இந்தச் செல்போன் கட்டணத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!