`விலை 300 ரூபாய்' - போலி ஹெல்மெட்களை கூவி விற்ற 2 பேர் சிக்கினர்

தரமற்ற போலி ஹெல்மெட்டுகள் சிக்கியிருப்பதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரமற்ற ஹெல்மெட்டுகள்

இருசக்கர வாகன ஓட்டிகள்  கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து சமீபகாலமாக ஹெல்மெட் அணிவது பரவலாகி உள்ளது. மேலும், சந்தையில் அதன் விற்பனையும் கன ஜோராக உள்ளது. அதேவேகத்தில் பல இடங்களில் தரமில்லாத ஹெல்மெட்டுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த ஹெல்மெட்டுகளில், போலி ஐ.எஸ்.ஐ முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், தரமான ஹெல்மெட்டின் விலை 1,200 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சாலை ஓர நடைபாதைகளில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டுகளின் விலை, ரூபாய் 300 முதல் 800 வரை விற்கப்படுகிறது. இப்படியான ஹெல்மட் தரமற்றது என்றாலும், ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள்  இந்த விலை குறைவான ஹெல்மெட்டுகளை  வாங்குகின்றனர்.

இந்நிலையில் போலி முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் முத்தரசுக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து ஆய்வாளர் முத்தரசு தலைமையிலான போலீஸார், திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த சையது மற்றும் கம்பரசம் பேட்டை பகுதியைச் சேர்ந்த மிதோகுமார் உள்ளிட்ட இருவர்  தரமில்லாத போலி ஹெல்மெட்டுகளை வைத்து விற்பனை செய்துவந்தது தெரிந்தது. மேலும், அவர்களைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து அவர்களிடமிருந்த 76க்கும் மேற்பட்ட தரமற்ற போலி ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவர் மீதும், வழக்குப் பதிவு செய்த போலீஸார், சையது மற்றும் மிதோகுமார் ஆகியோர் எந்தப் பகுதியிலிருந்து இந்தப் போலி தரமில்லாத ஹெல்மட்டுகள் சப்ளை செய்யப்படுகின்றன என்றும், அதனைப் பாதுகாக்கும் குடோன் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலி ஹெல்மெட் விற்பனை குறித்து தீவிரமாகக் கண்காணிக்கவும், அடுத்து திருச்சி மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் போலி ஹெல்மெட்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!