`சிரியா போரை ஐ.நா கைகட்டி வேடிக்கை பார்ப்பதா?’ கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

சிரியா போர்- ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சேலம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு சிரிய அதிபர் பசர் அசாத், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் ஆகியோருக்கு எதிராக முழக்கத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

முகமது ஓலிஇதைப்பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தனிக்குழு உறுப்பினர் முகமது ஓலி, ''ஈவு இரக்கமின்றி தன் சொந்த நாட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும், ரசாயனக் குண்டுகளை வீசிக் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கும் மனித குல விரோதியான சிரிய அதிபரையும், அதற்கு உடந்தையாய் நிற்கும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

மனிதநேயம் இல்லாமல் சிரியா எண்ணெய் வளம் நிறைந்த நாடு என்பதால் அதை அபகரிக்க ஆதாயத்தோடு வெளிநாட்டவர்கள் சிரிய அரசை ஆதரித்தும், உடந்தையாகவும் செயல்பட்டு வருகிறார்கள். சிரியாவை விட்டு எல்லா நாடுகளும் வெளியேற வேண்டும். சிரிய உள்நாட்டுப் போரை ஐ.நா., கைக்கட்டி வேடிக்கை பார்த்து வருவது தவறானது. பொதுமக்களைப் போல ஐக்கிய நாட்டு சபை கண்டனத்தை மட்டும் பதிவு செய்வது ஏற்புடையது அல்ல. உடனே தலையிட்டு சிரிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிரியாவில் உள்நாட்டுப் போரால் அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் படும் துயரங்களை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வந்ததைப் பார்த்து பல நாடுகளும் கண்டனக் குரல்களை எழுப்பி வரும் நிலையில் இந்தியா அமைதியாக இருப்பது வேதனைக்குரியது. தமிழக அரசியல் தலைவர்கள் திருமாவளவனை தவிர மற்றவர்கள் யாரும் இதை பெரிய அளவில் பேசவில்லை. மற்ற தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். சிரிய அதிபர் பசர் அசாத் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க ஐ.நா சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். சிரியா அதிபர் பசர் அசாத்தை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!