`வீடுகளில் நாய்களுக்குப் பதில் கேமரா பொருத்துவது ஏன்?’ போலீஸின் சுவாரஸ்ய விளக்கம்

முன்பெல்லாம் பணக்கார வீடுகளில் திருட்டைத் தடுக்க, அல்ஷேசன், ராஜபாளையம் போன்ற நாய்கள் வளர்ப்பார்கள். ஆனால், தற்போது அந்த நிலை படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு மாற்றாக, கண்காணிப்புக் கேமரா பொருத்தும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கேமரா

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, இதற்கான காரணங்களை சுவாரஸ்யமாக விளக்கினார். ’நாய்களைப் பராமரிக்க நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருப்பதாலும் திருடர்கள் மயக்க பிஸ்கட்டைப் போட்டு தங்கள் கைவரிசையைக் காட்டிவிடுவதாலும் அல்ஷேசன், ராஜபாளையம் போன்ற நாய்கள் வளர்ப்பதில் பணக்காரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கும்பகோணத்தில் வசதிமிக்கவர்கள் வாழக்கூடிய நகர்களில் பெரும்பாலான வீடுகளில் கம்பீரமான நாய்கள் இருந்தன. ஆனாலும், அடிக்கடி திருட்டுகள் நடந்தன. இதனால் தற்போது நாய்களை கைவிட்டு, கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துகிறார்கள். இது எங்கு இருக்கிறது என்பதைத் திருடர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கைவரிசையைக் காட்டும் திருடர்களைக் கேமராக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இந்தப் பயத்தாலேயே திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டத் தயங்குகிறார்கள். தெருக்களின் முக்கிய இடங்களிலும் இது பொருத்திவிடுவதால் திருட்டுச் சம்பவம் பெருமளவு குறைந்துவிடுகின்றன. இதனால்தான் காந்திநகர், திருவேங்கடம் நகர், ஸ்ரீநகர்காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து கேமராக்கள் வைத்துள்ளார்கள். தங்களது வீடுகளிலும் கேமராக்கள் பொருத்தியுள்ளார்கள். இவை காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!