`உசுரோட மதிப்பு 5 லட்சம்தானா?' - நீதிகேட்டு சடலத்துடன் மறியல் செய்த உறவினர்கள்

தலையில் மரம் விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பள்ளியிலேயே வைத்திருந்ததால் அவர் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்களும் உறவினர்களும் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் மறியல்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூரில் உள்ள பிலோமினா பள்ளியில் தேக்கு மரம் வெட்டச் சென்ற செந்தில் என்ற இளைஞர் மரத்தை வெட்டும்போது அருகில் இருந்த தென்னைமரம் சாய்ந்து விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் செந்தில்குமாரின் உடலை பள்ளிக்கு முன்பு சாலையின் நடுவே வைத்து பந்தல் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் செந்துறை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம். "செந்தில்குமார் மரம் வெட்டும் வேலைதான் செய்துவருகிறார். யார் கூப்பிட்டாலும் மரம் வெட்டச் சென்றுவிடுவார். அதேபோலதான் பள்ளியில் தேக்கு, தென்னை மரங்கள் இடைஞ்சலாக வளர்ந்திருக்கிறது என்று செந்திலைக் கூப்பிட்டிருக்கிறார்கள். தேக்குமரத்தை அறுத்துவிட்டு கயிரைக்கட்டி இழுத்தபோது தென்னை மரத்தின்மீது சிக்கி செந்திலின் தலையில் மரம் விழுந்துள்ளது. அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல் அங்கேயே வைத்திருக்கிறார்கள். உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லவில்லை. இது எந்த விதத்தில் நியாயம். எங்களுக்குத் தெரிந்ததும் பள்ளியை முற்றுகையிட்டு பிரச்னை செய்தோம்.

உறவினர்கள் மறியல்

அதன் பிறகு, அவர்கள் பள்ளிப் பேருந்திலேயே மருத்துவமனையில் செந்திலை இறக்கி வைத்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார்கள். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவர் இறந்து இரண்டு மணிநேரம் ஆகிறது என்று சொல்ல ஆவேசத்தில்தான் நாங்கள் பள்ளியின் முன்பு உடலை வைத்து போராட்டம் நடத்தினோம். அப்படி இருந்தும் பள்ளி நிர்வாகம் அவர்களின் தவறை மறைக்க 5 லட்சம் வரை தருகிறோம். பிரச்னை பண்ணாதீங்க என்று சொல்கிறார்கள். ஒரு உசுரோட மதிப்பு 5 லட்சம்தானா. செந்திலுக்கு ஏற்பட்டதுபோல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது" என்று கண்ணீர் மல்க கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!