`அ.தி.மு.க மாவட்டச் செயலாளரா தூத்துக்குடி ஆட்சியர்?' - கொந்தளிக்கும் தி.மு.க இளைஞரணி 

தூத்துக்குடியில் தி.மு.க கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க இளைஞரணி கண்டனம் தெரிவித்துள்ளது. 

DMK Flag


இதுகுறித்து, தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க இளைஞரணி சார்பில் கடந்த 24.2.2018-ம் தேதி தூத்துக்குடியில் தி.மு.க செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாகைக்குளம் விமானநிலைய சாலை அருகே, இந்திய உணவுக்கழக குடோன் எதிரில், உப்பாற்றுஓடை ரவுண்டானா அருகில் மற்றும் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே என நான்கு இடங்களில் தனியாருக்குச் சொந்தமான பட்டா இடங்களில் இடத்தின் உரிமையாளர்கள், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் காவல்துறையிடம் முறையான அனுமதிபெற்று 65 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க கொடிகள் ஏற்றப்பட்டன. 
JOEL

இந்நிலையில், ஆளும்கட்சியின் தூண்டுதலால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் வெங்கடேஷ்  உத்தரவின் பேரில் கடந்த 27.2.2018 அன்று அதிகாலை 1.30 மணி முதல் 3.30மணி அளவில் தூத்துக்குடி வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தி.மு.க கொடிக்கம்பத்தின் இரும்புக்கயிறுகளை அறுத்து தி.மு.க கொடிகளை கிழித்து எறிந்துள்ளனர். சட்டவிரோதமான இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாதது வருத்தத்துக்கு உரியதாகும்.

மாவட்ட ஆட்சியாளர் ஆளும்கட்சியின் தூண்டுதலின்பேரில் முறையான அனுமதிபெற்று பறந்த தி.மு.க கொடிகளை மட்டும் அகற்றியது பாரபட்சமான செயலாகும். ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர் போன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் வெங்கடேஷ் செயல்பட்டு வருகிறார். தனிநபர்களுக்கு சொந்தமான பட்டா இடங்களில் ஏற்றப்பட்ட தி.மு.க கொடிகளை அகற்றிய மாவட்ட ஆட்சியாளர் அனுமதியின்றி பறந்துவரும் அ.தி.மு.க கொடிகளையும் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க இளைஞரணி சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!