வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:22:00 (03/03/2018)

சேலம் தி.மு.க-வில் கோஷ்டி பூசல்! - சுவர் விளம்பரங்கள் தொடர்பாக வெடிக்கும் மோதல்

சேலம் தி.மு.க என்றாலே கோஷ்டி பூசல் என்றே அர்த்தம். சேலம் தி.மு.க-வில் ராஜா, ராஜேந்திரன், சிவலிங்கம், செல்வகணபதி இவர்களின் கோஷ்டி பூசல் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது தி.மு.க-வில் புதிதாக முன்னாள் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க-வின் தேர்தல் பணிக்குழு செயலாளருமான பார்த்திபனுக்கும் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்துக்கும் நடக்கும் கோஷ்டி பூசல் தி.மு.க-வினரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இதுபற்றி தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபனின் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ''அண்ணன் எப்போதும் ரொம்ப ஆக்டிவ்-வாக செயல்படக்கூடியவர். கடந்த முறை தே.மு.தி.மு.க கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் எந்த அரசியல் கட்சித் தலைவர்களாலும் செய்ய முடியாத செயல்களைச் செய்தவர்.

தலைமுறை தலைமுறையாகப் பேருந்து வசதி இல்லாமல் தவித்து வந்த பச்சைமலை மலைவாழ் மக்களுக்கு ரோடு போட்டுக் கொடுத்தார். காவிரி ஆறு மேட்டூரில் இருந்தாலும் மேட்டூரைச் சுற்றியுள்ள மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என்று மேட்டூர் அணைமீது ஏறி போராடத் துணிந்தவர். மக்களோடு மக்களாக வாழும் அண்ணன், தி.மு.க-வுக்கு வந்தபிறகு அணிகள்மீது அக்கறை காட்டாமல் தலைமைக்கும் தளபதிக்கும் உன்னதமாக நடந்து வருகிறார்.

வரும் 24, 25 தேதிகளில் ஈரோடு மண்டல மாநாட்டுக்கு வருகை தரும் தளபதியாருக்கு வரவேற்பு விளம்பரங்களை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, கிளை செயலாளர்கள் யாரும் எழுதாதபோது பார்த்திபன் அண்ணன்  தன்னுடைய சொந்த செலவில் ரூ.5,00,000-க்கும் மேல் செலவு செய்து மேட்டூர், மேச்சேரி, எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, சங்ககிரி எனப் பல பகுதிகளில் 200 முதல் 300 அடி நீளத்துக்கு சுவர் விளம்பரங்களை முறையாக மாவட்டச் செயலாளர் பெயர் போட்டு எழுதி வந்தார். ஆனால், காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாகச் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் அனைத்து விளம்பரங்களையும் அழித்து வருகிறார். இதனால் பார்த்திபன் அண்ணன் ரொம்ப மன உளைச்சல் அடைந்துள்ளார்'' என்றார்கள்.

சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதா என்று தேர்தல் பணிக்குழு செயலாளர் பார்த்திபனிடம் கேட்டதற்கு, ''நீங்கள் கேட்பது உண்மைதான். ஆனால், இதுபற்றி நான் பேச விரும்பவில்லை'' என்றார்.

இதுபற்றி சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் கேட்டதற்கு, ''நான் அழிக்கச் சொல்லவில்லை. ஆனால், தொண்டர்கள் அழிப்பார்கள். காரணம் தி.மு.க என்பது பல விதிமுறைகளை உள்ளடக்கிய அமைப்பு. தலைமை, தளபதியால் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தேர்த்தெடுக்கப்பட்டிருக்கிறோம். அவர்களின் பெயர்களைக்கூட மாவட்டத்தில் போடாமல் விளம்பரம் எழுதினால் அது முறையானதா?'' என்றார்.