அறிவிப்போடு நின்றுவிடுவாரா தேனி கலெக்டர்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி

தேனி மாவட்டத்தில் இனி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியிருக்கிறார். இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  ’’தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீர் நிலையங்கள், ஹோட்டல்கள்,  பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், திருமண மண்டபங்கள், அன்னதானம் வழங்கும் இடங்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் குவளைகளைப் பயன்படுத்தி இட்லி தயாரிக்கப்படுகிறது. இதனால் புற்றுநோயும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் ஏற்படுகிறது.

எனவே, இயற்கையாக வாழை இலையில் வைத்து உணவுகளை பரிமாற வேண்டும். அதேநேரம் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைக் பார்த்தால், மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் 944042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாதவர்களுக்காக இலவச தொலைபேசி எண்னை அறிமுகம் செய்திருக்கலாம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ’இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த மாவட்டமாக திகழும் தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட வேண்டியவையே. புதிதாக வந்திருக்கும் கலெக்டர், வெறும் அறிவிப்போடு நின்றுவிடுவாரா? அல்லது உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் கடைகள், ஹோட்டல்களில் தொடர் ஆய்வினை மேற்கொண்டு, தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!