வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (03/03/2018)

அ.தி.மு.க பிரமுகரின் கார் உடைப்பு...மகனிடம் நகை பறிப்பு!- தினகரன் ஆதரவாளர்கள் மீது புகார்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரின் கார் உடைப்பு சம்பவம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

கார் உடைப்பு

நெல்லை மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சற்று பலத்துடன் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிகள். ஒவ்வொரு நிர்வாகியும் தனித்தனியாக ஆதவாளர்களைத் திரட்டுவதால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள், தினகரன் ஆதரவு மனநிலையில் உள்ளனர். மாவட்டத்தில் நிலவும் கோஷ்டிகளைச் சமாளிக்க முடியாத காரணத்தாலேயே இதுவரையிலும் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குக் கூட யாரையும் நியமிக்காமல் கட்சித் தலைமை காலம் தாழ்த்தி வருவதாகக் கட்சியினர் புலம்புகிறார்கள்.

இந்தநிலையில், நெல்லை புறநகர் மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளரான இ.நடராஜன் வீட்டுக்குச் சென்ற சிலர் அவரைத் தேடி உள்ளனர். அவர் இல்லாததால், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர், மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த அந்தக் கும்பல், வீட்டில் இருந்த இ.நடராஜனின் மகன் மனோஜ் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து பேசிய இ.நடராஜன், ’’எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. ஆனால், அரசியல்ரீதியாக கடந்த சில தினங்களாகவே எனக்கு மிரட்டல்கள் வந்தன. நான் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன். கடந்த 1-ம் தேதி புறநகர் மாவட்ட ஜெ.பேரவை சார்பாக அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தினோம். அதில் டி.டி.வி.தினகரன் பற்றி கடுமையாகப் பேசினேன். குறிப்பாக கட்சிக்கு அவர் செய்த துரோகங்களைப் பட்டியலிட்டுப் பேசினேன். அதன் பின்னர் எனக்கு அதிக மிரட்டல்கள் வந்தன.

இந்த நிலையில், இன்று 6 பேர் கொண்ட கும்பல் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னைத் தேடியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக நான் அப்போது வீட்டில் இருக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கும்பல் எனது காரை அடித்து நொறுக்கி விட்டது. அத்துடன், எனது மகன் 12-ம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்துள்ளான். அவன் கழுத்தில் கிடந்த செயினைப் பறித்துவிட்டு அவனை கீழே தள்ளிவிட்டுப் போயிருக்கிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களே இதைச் செய்திருக்கிறார்கள். அதனால் இது பற்றி போலீஸில் புகார் செய்துள்ளேன்’’ என்றார்.

இ.நடராஜனுக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டியம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர் ஏற்கெனவே இது தொடர்பாக இ.நடராஜன் மீது புகார் கொடுத்துள்ளார். அதனால், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இ.நடராஜன் காரை அடித்து நொறுக்கினார்களா? என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.