Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“விஞ்ஞானம் திருடனுக்கு மிகப்பெரிய வசதியைச் செய்து கொடுக்கிறது!”- தா.பாண்டியன் வேதனை

கடன்

Erode: 

“இந்தியாவில் 5 ரூபாய், 10 ரூபாய் லஞ்சம் வாங்குபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், கோடி கோடியாய் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்பவர்கள் ராஜ மரியாதையோடு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசினார்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ‘இன்றைய பொருளாதாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசுகையில், “1947-ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலரைப் பெற வேண்டுமானால், இந்திய ரூபாய் மதிப்பில் 2 ரூபாய் கொடுத்தால் போதும். ஆனால், இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலரைப் பெற 67.50 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. அன்றைக்கு ஏழ்மையாக இருந்த இந்தியா கொடுத்த 2 ரூபாய்க்கு இருந்த மரியாதை, இன்றைக்கு இல்லையே! அந்தக் காலக் கட்டத்தில் வெறும் 483 கோடி ரூபாய்க்கு தான் இந்தியாவிற்கு மொத்த பட்ஜெட்டே போடப்பட்டது. ஆனால், இன்றைக்கு ரூ.19 லட்சம் கோடிக்கு அருண் ஜெட்லி பட்ஜெட் போட்டிருக்கிறார். இந்தியா இன்றைக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறது. ஆனால், பண மதிப்பில் ஏன் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பதனை ஆராய வேண்டும்.

துவரம்பருப்பைப் போல் உள்ள பிட் காயின் உலகில் உள்ள 32 நாடுகளில் கள்ளத்தனமாக 53 லட்சம் கோடி ரூபாய்க்கு புழங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 2 லட்சம் கோடி மதிப்பிலான பிட் காயின் புழக்கத்தில் இருக்கிறது என சமீபத்தில் ரிசர்வ் வங்கியே எச்சரித்திருக்கிறது. பார்டிசிப்பேட்டரி நோட்ஸ் எனப்படும் பங்கெடுப்பதற்கான ரசீது மூலமாக கிட்டத்தட்ட 75 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் புழங்கி வருகிறது. அதேபோல் கிரிப்டோ கரன்சி என்ற ஒன்றும் இந்தியாவில் புழங்கி வருகிறது. இப்படி சட்டத்திற்கு கட்டுப்படாத கள்ளப்பணம் ஒன்று சட்டத்தையே கட்டுப்படுத்தி வருகிறது. விஞ்ஞானம் திருடனுக்கு மிகப்பெரிய சௌகரியத்தை செய்கிறது. இது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து.

இந்தியாவில் 5 ரூபாய், 10 ரூபாய் லஞ்சம் வாங்கினால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், கோடி கோடியாய் கடன் வாங்கி  தப்பிச் செல்பவர்கள் ராஜ மரியாதையோடு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று வேதனையுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.  

பின்னர் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த  தா.பாண்டியன், “கிடைக்கும் நேரமெல்லாம் திருக்குறளை திரும்பத் திரும்ப வாசியுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் அதை வாசிக்கும் போதும் புதுப்புது சிந்தனைகள் உங்களுக்குப் பிறக்கும்” என்ற அறிவுரையை வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், “காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒன்றாகக் கூடியது வரவேற்கத்தக்கது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூறிவரும் வரும் கருத்துக்கள், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது போல் இருக்கிறது. கடன் என்ற பெயரில் கோடி கோடியாய் பெற்று வெளிநாட்டுக்குச் சென்றவர்களுடைய நிறுவனங்கள், எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இயங்கி வருகின்றன. 

பிறக்கின்ற குழந்தை மருத்துவமனையிலேயே கடத்தப்படுகிறது. முதியோர் இல்லங்களில் தங்கி இறந்தவர்களின் எலும்பும், உடலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தஞ்சையில் ராஜராஜ சோழன், தேவியார் சிலை கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பார்க்கையில், இந்த குற்றங்கள் அனைத்தையும் தடுக்கும் சக்தியை இந்த அரசு இழந்திருக்கின்றது என்று தெரியவருகிறது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement