தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அமைச்சரின் உதவியாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு!

ராமநாதபுரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக அமைச்சர் மணிகண்டனின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினரும் போட்டி போட்டு நடத்தும் பொதுக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்ச்சித்து வருகின்றனர். இதில் அமைச்சராக உள்ளோம் என்பதையும் மறந்து அமைச்சர் மணிகண்டனே நேரடியாக எதிர் தரப்பினரை தரம் தாழ்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமநாதபுரம் கொத்தர் தெருவில் வசித்து வரும் டி.டி.வி. அணியினை சேர்ந்த இளைஞரணி செயலாளர் கமல், இலக்கிய அணி செயலாளர் தவமுனியசாமி ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் மீது வீசப்பட்ட பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் அங்கு சிதறிய நிலையில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த டி.டி.வி ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் ஜி.முனியசாமி ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையம் முன்பு திரண்டு இச்சம்பவத்திற்கு தூண்டுதலாக உள்ள அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் ராமநாதபுரத்தில் பதட்டம் நிலவியது.

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக அமைச்சர் மணிகண்டனின் நேர்முக உதவியாளர் (அரசியல்) சண்முகபாண்டியன் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆதுல் அமீன், தஞ்சி சுரேஷ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 பேர் மீது பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆதுல் அமீனை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் மணிகண்டனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர், ‘’நான் செய்து வரும் நல்ல பணிகளால் எனக்கு நற்பெயர் ஏற்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இன்று நான் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை சீர்குலைக்கும் வகையில் இச்சம்பவம் நடந்துள்ளது. எனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களிடம் இது போன்ற சட்டத்திற்கு புறம்பான சமூக விரோத செயல்களில் ஈடுபட கூடாது என கட்டுப்பாடு விதித்திருக்கிறேன். எனவே எங்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பில்லை’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!