வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (04/03/2018)

கடைசி தொடர்பு:17:54 (04/03/2018)

மூங்கில் இருக்கும் காட்டில் யானைகள் வெளியேறுவதில்லை... ஏன்?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. காடுகளை விட்டு யானைக்கூட்டம் ஊருக்குள் வருவதே இதற்குக் காரணம். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஊருக்குள் வந்த 21 யானைகள் விபத்தில் இறந்துள்ளன. அதே போல் யானைகளின் தாக்குதலில் பலியான மனிதர்களும் ஏராளம். இது போன்ற சம்பவங்கள் நிகழ யார் காரணம் என்பதை விவரமாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கே.மோகன்ராஜ்.

"60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமாரி மாவட்டத்தில் முடிவடைகிறது. இதன் நீளம் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இந்த மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, வைகை, கபினி, அமராவதி, நொய்யல், தாமிரபரணி என்று பல நதிகள் உற்பத்தியாகின்றன. பசுமை மாறாக்காடுகளையும் அடர் வனங்களையும் அதிகம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலையை யானைகளின் சொர்க்கம் என்று விலங்கு நல ஆர்வலர்கள் வர்ணிக்கிறார்கள்.

யானைகள்

குறிப்பாக, நீலகிரி, அந்தியூர், மேட்டுப்பாளையம், ஆனைமலைக்காடுகள், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மற்ற விலங்குகளைப்போல இல்லாமல் யானைகள் தனித்தனிக்கூட்டங்களாக அலைந்து கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. யானை ஒன்றுக்குக் குறைந்த பட்சம் 250 கிலோ தாவர உணவும், 100 லிட்டர் குடித் தண்ணீரும் தேவைப்படும். வறட்சி, காடு அழிப்பு, மனிதர் குடியேற்றம் அதனால் ஏற்படும் சூழல் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் இடம்பெயர்கின்றன. காடு விட்டு காடு போகும் யானைகள் தங்களுக்கு என்று ஒரு வனப்பாதையை ஏற்படுத்திக்கொண்டு அச்சுபிசகாமல் அந்தப் பாதையில் சென்று திரும்பும் வழக்கம் உள்ளவை. உணவுக்காக இடம் பெயர்வதை ‘வலசை’ போகுதல் என்பார்கள். ஆயிரக்கணக்கான யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை 19 வழித்தடங்களில் மட்டும்தான் வலசை போகும். எந்த இடைஞ்சலும் இல்லாமல் யானைகள் இந்தப்பாதைகள் வழியேதான் காடு விட்டு காடு போய் தங்களது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்து வந்தன.

காலங்காலமாய் இருந்த யானைகளின் வழித்தடங்கள், இப்போது பல்வேறு கட்டுமானப்பணிகளால் அடைக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக திசை மாறி, வழிமாறிய யானைக்கூட்டங்கள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. யானைகளுக்குத் தேவையான உணவும், தண்ணீரும் சிலசமயம் கிடைக்காமல் போய்விடுகின்றன. அப்போதுதான் உணவையும் நீரையும் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் புகுந்து அதில் உள்ள பயிர்களை துவம்சம் செய்து அழிக்கின்றன. எதிரில் தென்படும் மனிதர்களைத் துரத்தி மிதிக்கின்றன. யானைகளை மனிதன் விரட்டுவதும் மனிதர்களை யானைகள் துரத்துவதும் கோவை மாவட்டத்தில் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

கோவைப்பகுதியில் மட்டும் கல்வி நிறுவனங்கள், மத சம்பந்தமான மையங்கள், கேளிக்கை விடுதிகள் என்று 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் யானைகளின் வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் காடு விட்டு காடு போகும் யானைகள் வழி மாறி ஊருக்குள் வந்து விடுகின்றன. அதே போல் யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மூங்கில். இது அதிகம் விளைந்துள்ள வனப்பகுதியில்தான் யானைகள் நடமாட்டம் இருக்கும். இந்த மூங்கில் உணவு தீரும்வரை வேறு எங்கும் செல்லாது. அது அழிந்து மறு தழைவு வரும் இடைப்பட்ட காலத்தில் மூங்கில் வனம் தேடி அடுத்த காட்டிற்கு செல்லும். இப்படி உணவுக்காகப் பலநூறு கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் யானைகளுக்கு உண்டு. ஆனால், சமீப காலங்களில் யானைகளுக்கு பிடித்தமான மூங்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. மலையடிவாரத்தில் உள்ள சமவெளிப்பகுதியில் உள்ள மூங்கில் குதிர்கள் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருவதால் விவசாய நிலங்களுக்குள் யானைகள் படையெடுக்கின்றன. மொத்தம் உள்ள வனப்பரப்பில் 6 சதவிகிதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பல்லுயிர் பெருக்கம் நிகழும், வன உயிர்சங்கிலியின் கன்னிகள் அறுந்து போகாமல் காப்பாற்றப்படும்.

பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகம் இருப்பதுபோல், ஏற்கனவே உள்ள பாதுகாக்கப்பட்ட யானைகள் காப்பக பகுதிகளை அதிகப்படுத்தவேண்டும். அங்குள்ள மரங்களில் ஒரு பல் குச்சி கூட யாரும் ஒடிக்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, அந்தியூர், பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள வனங்களைத் தீவிரமாக பாதுகாக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவை வன எல்லையைத் தாண்டும் முன்பே தடுத்து மீண்டும் வனத்துக்குள் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும். இதுவரை வேட்டைத்தடுப்பு காவலர் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட மலைவாழ்மக்கள் இளைஞர்களுக்கு, தொழில் நுட்ப பயிற்சிகள் கொடுத்து, நவீன கருவிகள் மூலம் யானைகளைக் கண்காணித்து வனத்தை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும் பணிகளைக் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் மனிதர்களுக்கும்  யானைகளுக்குமான மோதலை ஓரளவேனும் தடுக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

யானை

வனங்களை ஒட்டிய பகுதிகளில் மானாவாரிப் பயிர்கள் இருந்தபோது யானைகள் ஊருக்குள் வரவில்லை என்கிறார் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வையாபுரி. "மலையை ஒட்டிய சமவெளிப்பகுதியில் 10 கிலோமீட்டர் சுற்றளவில் காடு இருந்தது. இந்தச் சமவெளிக்காடுகளில்தான் அனைத்து மரங்களும் இருந்தன. புல்வெளிகள், நீர் தடாகங்கள் இருந்தன. அதில் எண்ணற்ற வன உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. ஆனால், காலப்போக்கில் வனங்களுக்குள் சாலை அமைக்கப்பட்டது. அதில் வந்தது வினை. வனங்களை அழித்து காஃபி,தேயிலை, ஏலக்காய் என்று பனப்பயிர்களை சாகுபடி செய்தனர். இயல்பான போக்கில் ஓடிக்கொண்டிருந்த மலை நீரோடைகளை மறித்து திசை திருப்பினார்கள். அடிவாரக்காடுகளை அழித்து விளை நிலங்களாக்கினார்கள். அந்த நிலங்களில் யானைகளுக்கு பிடித்தமான கரும்பு, வாழை, தென்னை போன்ற பனப்பயிர்களை நடவு செய்தார்கள். மலை மீது உணவு கிடைக்காத போது கீழே இறங்கி அடிவாரப்பகுதியில் விளைந்து கிடக்கும் பயிர்களை ருசிபார்த்த யானைகள் தொடர்ந்து விளை நிலங்களைச் சூறையாடியவாறு வனத்தை விட்டுப் பல கிலோமீட்டர் கடந்து ஊர்ப்பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. திரும்பும் வழி மறந்து ரயிலில் அடிப்பட்டுச் சாகிறது.

இந்த அவலம் தடுக்கப்படவேண்டும். மனிதர்கள் வனத்துக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது. வனத்துக்குள் சாலைகள் அமைக்கக் கூடாது, வன விலங்குள் மின் விளக்கு கேட்கவில்லையே? வனத்துக்குள் மின்சாரம் கொண்டுசெல்லக்கூடாது. அங்கு காலங்காலமாக வாழும் பழங்குடி மக்களின் பொறுப்பில் வனப்பாதுகாப்பு இருக்கும் படி சட்டம் இயற்றவேண்டும் அப்பொழுதுதான் யானைகள் ஊருக்குள் வராது" என்றார்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவர் பி.கந்தசாமி, "வனத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் துறை, நகர ஊரமைப்புத்துறை ஆகிய துறைகளை இணைத்து மத்திய மாநில அரசு 'மலைப்பகுதி பாதுகாப்புக் குழுமம்‘ ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகுதான் வனப்பகுதிகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது விதி. ஆனால், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வனப்பகுதியில் கட்டுமானப்பணிகள் மேற்கொண்ட போது இதில் ஒரு துறை அதிகாரிகள் கூட தடுக்கவில்லை. இது ஏன்?

யானைகள் விவசாய நிலத்திற்குள் வரும்போது தீப்பந்தகளை அவை மீது வீசி அவற்றை பயமுறுத்தி விரட்டும் வழக்கம் அண்டை மாநிலமான கேரளாவில் நடை முறையாக உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் அப்படிச் செய்ய அனுமதி இல்லை.  வன ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யானைகளை மிரட்டப்படுவதை ஆட்சேபனை செய்கிறார்கள். சரி. இதே வன ஆர்வலர்கள் யானைகள் வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்த போது ஏன் ஆட்சேபனை செய்யவில்லை. கட்டடங்கள் கட்டி முடித்த பிறகு வழக்கு தொடர்ந்து என்ன பிரயோஜனம்? எனவே, யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் வனத்துறைதான் தடுக்கவேண்டும். வனத்துக்குள் செல்லும் மனிதர்கள் தீப்பெட்டி கூடக் கொண்டுசெல்ல அனுமதிக்காத வனத்துறை. யானைகள் ஊருக்குள் வருவதையும் தடுக்கவேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்