கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ் திருச்சி சிறைக்கு மாற்றம்..!

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கின் குற்றவாளி யுவராஜ், திருச்சி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

யுவராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ். வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தாக கூறப்பட்ட நிலையில் கடந்த. 2015 ஜூன் 24-ம்தேதி திருச்செங்கோட்டில் உள்ள மலைகோட்டைக்கு தான் காதலித்தப் பெண்ணுடன் சென்றவர், காணாமல் போனார். அதன்பிறகு அவர், பள்ளிப்பாளையம் அருகே உள்ள தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய திருச்செங்கோடு போலீஸார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸில் சிக்காமல், தலைமறைவாக இருந்த யுவராஜ், பல மாதங்கள் போலீஸுக்கு எதிராக வாட்ஸ் அப் தகவல்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக இவர் வெளியிட்ட ஆடியோ, வைரல் ஆனது. இந்நிலையில் இந்த கொலை வழக்கை விசாரித்த நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இவர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் யுவராஜ் வேலூர் சிறையிலும், அவரது கார் ஓட்டுநர் அருண் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இடையில் சென்னை உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், யுவராஜ், தொடர்ந்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்ததை அடுத்து யுவராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக யுவராஜ் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோதும், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்து யுவராஜ், வெளியே வந்தால், குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரை சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர், யுவராஜ் உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ், தான் இருக்கும் சிறையில் தனது  உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஆபத்துள்ளது, முறையாக சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும் ஆகவே தன்னை வேறு சிறைக்கு மாற்றிடக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறையில் இருக்கும் யுவராஜை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, யுவராஜ் போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் சிறையில் இருந்து நேற்று இரவு, இரவோடு இரவாக, யுவராஜை பலத்தபோலீஸ் பாதுகாப்புடன், திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இங்கு உயர் பாதுகாப்பு பிரிவான 2-ம் வகுப்பு அலகில் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிறையில் கோகுல்ராஜ் கொலை வழக்கின் குற்றவாளியான யுவராஜுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட போலீஸாருக்கு சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!