மாணவர்கள் உயிரை பலி வாங்க காத்திருக்கும் சுவர்..!

மாணவர்கள் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இருந்து வரும் சேதமடைந்த பள்ளிக்கூட சுற்றுச்சுவரை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் உயிரை பலி வாங்க காத்திருக்கும் பள்ளிச் சுவர்

கிராமங்கள், நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் கட்ட ஆண்டு தோறும் அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாறு ஒதுக்கப்படும் அரசு நிதியின் மூலம் கட்டப்படும் கட்டிடங்களில் பெரும்பகுதி முறையான வகையில் கட்டப்படுவதில்லை. இதற்கு உதாரணமாக பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க மணலால் கட்டிய அணை. தினைக்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஒன்னரை ஆண்டுகள் கூட தாங்காத பள்ளிக்கட்டிடம் போன்றவை உள்ளன. 

இந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம்  கடலாடி ஒன்றியத்தில் உள்ள ஆண்டிச்சிக்குளம் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரும் இணைந்திருக்கிறது. கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிச்சிக்குளம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்று கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் 17 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு சி.எஸ்.ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் ரூ 2.69 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இந்த சுற்றுச்சுவர் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுவரின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இப்ப விழுமோ அப்ப விழுமோ என உயிர் பலி வாங்க காத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் சுவற்றின் அருகே செல்லும் போதோ, விளையாடும் போதோ சேதம் அடைந்த சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். 

ஆயிரம் ஆயிரமாய் பணம் வாங்கி கொண்டு கல்வி கற்றுத் தரும் தனியார் பள்ளிகளிலேயே அங்கு படிக்கும் பிள்ளைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவலம் நாள் தோறும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியினை நம்பி பயில வந்திருக்கும் பிஞ்சு குழந்தைகளுக்கு அசாம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!