வெளியிடப்பட்ட நேரம்: 03:35 (04/03/2018)

கடைசி தொடர்பு:03:35 (04/03/2018)

தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் ”கண்டெய்னர் டாய்லெட்” அறிமுகம்

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாநகராட்சி  சார்பில் “கண்டெய்னர் டாய்லெட்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 நவீன கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   

container toilet in thoothukudi bus stand

”தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகராட்சி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநகராட்சியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன் அடுத்த முயற்சியாக “கண்டெய்னர் டாய்லெட்” வசதியை தூத்துக்குடி மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. கப்பல்களில் சரக்குகள் அனுப்பப்படும் சரக்கு பெட்டகங்களைக் கொண்டு தமிழகத்திலேயே முதன்முறையாக கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சரக்கு பெட்டகம் 20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது. 5 ஆண்கள் கழிப்பறைகள் மற்றும் 5 பெண்கள் கழிப்பறைகள் என தனித்தனியாக 10 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முன்புறம் ஆண்கள் கழிப்பறைகளும், பின்புறம் பெண்கள் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கென மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரக்கு பெட்டகத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வசதியும், மின்சார வசதியும் 24 மணிநேரமும் கிடைக்கும் படி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் கழிவறைகளை சுத்தம் செய்வது, கண்டெய்னர்களைச் சுற்றி குப்பைகள் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதற்காக  மாநகராட்சி சார்பில் தனியாக சுகாதாரப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

container toilet in thoothukudi

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸிடம் பேசினோம், “முதல்கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சியில் சத்யாநகர், ராஜபாண்டிநகர், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் காய்கறிச்சந்தை அருகில் என மொத்தம் 4 இடங்களில் இந்த கண்டெய்னர் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. முழுமையாக மாநகராட்சி நிதியில் இருந்து இவை அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சரக்கு பெட்டக கழிவறை அமைக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவாகிறது. மேலும் 4 இடங்களில் இந்த கண்ட்ர்ய்னர் டாய்லெட்டுகளை அமைக்க முடிவு செய்துள்ளோம். தேவைக்கு ஏற்ப மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

தூத்துக்குடி பழையபேருந்து நிலையத்தில், கடந்த 2 ஆண்டுகளாக இலவச பொதுக் கழிப்பறை வசதி இல்லாமல்  சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது இந்த கண்டெய்னர் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த கழிப்பறைகள் பொதுமக்களுக்கு மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி வழியாக இரவு, பகலாக திருச்செந்தூருக்குப் பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் உபயோகத்திற்கும் இவை பயன்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க