"எங்களுக்குத் தலைவர் டி.டி.வி.தினகரன்தான்!" -  ஜெய் ஆனந்த் அதிரடி

அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, சசிகலா உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்  தவிர வேறு  யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை என்று புதுக்கோட்டையில் சசிகலாவின் அண்ணன் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறினார்.

புதுக்கோட்டையில் நேற்று மாலை சசிகலாவின் அண்ணன் திவாகரன் மகனும் 'போஸ் மக்கள் பணி இயக்கம்' என்ற அறக்கட்டளையின்  நிறுவருமான ஜெய்யானந்த் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்க்காக வந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த ஓட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் .அப்போது அவர் பேசும் போது, "எங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் தினகரனை தலைவராக எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டோம். எனது அப்பாவுக்கும் அவர்தான் தலைவர். மக்களின் மத்தியில் செல்வாக்குள்ள தலைவராக அவர் உருவாகிவிட்டார்.

எனது 'போஸ் மக்கள் பணி இயக்கம்' ஒரு அறக்கட்டளை. இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். இது அரசியல் இயக்கமாக எப்போதும் செயல்படாது. நானும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்க்கும் பணியில் இந்த இயக்கம் செயல்படும். எனது இயக்கத்தைக் குறித்து வரும் தேவையற்ற விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. 

முன்னாள் முதல்வர் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலா உட்பட எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அவரை பார்க்கவில்லை. ஓபிஎஸ் உட்பட வேறு யாரும் அப்போது ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அம்மா வீடியோ வெளியிட்ட பிரச்சனையில் விசாரணை ஆணையர் அழைத்தால் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.  எங்களால் அடையாளம் காணப்பட்டு, எங்களால் இன்றைக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களால் துரோகம் இழைக்கப்பட்டதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஒருபோதும் அவர்களால் எங்களுக்கு  வலியை ஏற்படுத்த முடியாது. 

துரோகம் செய்தவர்களுக்கு இனிமேல்தான் வலி ஆரம்பமாகப் போகிறது. யார் துரோகி என்பதை மக்கள் இப்போது தெளிவாக புரிந்துக்கொண்டு விட்டார்கள்.அவர்களுடன் நாங்கள் இருந்திருந்தால்,எல்லா தவறுகளையும் அவர்களே செய்துவிட்டு, எங்கள் குடும்பத்தைக் கைகாட்டி விட்டுப் போய் விடுவார்கள். இப்போது அது நடக்காது. அந்த வகையில் எங்களுக்கு பெரிய ரிலீஃப்தான்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!