"பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை என்ன?" துணைவேந்தர்களைக் குடைந்தெடுத்த கவர்னர்! | Governor's meeting with Universities officials

வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (04/03/2018)

கடைசி தொடர்பு:05:40 (04/03/2018)

"பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமை என்ன?" துணைவேந்தர்களைக் குடைந்தெடுத்த கவர்னர்!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் கவர்னர் பன்வாரிலால் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

கோவை, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சப் புகாரில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் நடக்கும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், செயலாளர் சுனில்பாலிவால் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னையில் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டனர். துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர் பொறுப்புக்குழுவினர் கலந்து கொண்டனர். கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பதிவாளர் வனிதா மற்றும் துணைவேந்தர் பொறுப்புக்குழுவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜெயக்குமார் கலந்து கொண்டனர். அப்போது, பல்கலைக்கழக வாரியாக இருக்கும் நிலைகளை கவர்னர் கேட்டறிந்தார். இதற்காக, பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் பி.பி.டி தயாரித்து சென்றிருந்தனர்.

தங்களது பல்கலைக்கழகத்தில் நிலைமையை சம்பந்தட்ட அதிகாரிகள் கவர்னரிடம் விளக்கினர். இதைத்தொடர்ந்து, துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் முன்னிலையில் பேசிய புரோஹித், “பல்கலைக்கழக நிர்வாகத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பேராசிரியர் பணி நியமனங்கள், பல்கலைக்கழக நிர்வாகம், கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தம் ஒதுக்குவதில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. மேலும், பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முக்கியமாக, கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்” என்று கவர்னர் பேசியுள்ளார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்தின் நிதி நிலவரங்கள் குறித்தும் கவர்னர் கேட்டறிந்துள்ளார்.


[X] Close

[X] Close