வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (04/03/2018)

கடைசி தொடர்பு:06:20 (04/03/2018)

அ.தி.மு.க-வினர் புறக்கணித்த அம்மா பிறந்தநாள் மருத்துவ முகாம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பங்கேற்பு!

நெல்லையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த தாய்சேய் நல மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வசந்தகுமார் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிகளைச் செய்தார். இந்த விழாவில் அ.தி.மு.க-வினர் பங்கேற்காதது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

மருத்துவ முகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக தமிழகம் முழுவதும் 700 சிறப்பு சிறப்பு மருத்துவ முகாம்களும், 700 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இது தொடர்பாக பத்திரிகைகளிலும் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. பிப்ரவரி 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில், இதய சிகிச்சைகள், புற்றுநோய் மருத்துவம், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, மூட்டுவலி சிகிச்சைகள், கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைகள், நுரையீரல் சிகிச்சைகள்., சிறுநீரக நோய்கள், மூளை மற்றும் நரம்பு மண்டல சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை இலவசமாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

அத்துடன், பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரையிலும் தமிழகத்தின் 700 மையங்களில் சிறப்பு தாய்சேய் நல சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகால சிகிச்சைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் பரிசோதனைகள், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பரிசோதனைகள், அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையத்தில் பதிவு செய்தல், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு பதிவு செய்தல், உயர் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை அந்தந்த மையங்களில் ஏற்பாடு செய்யபப்டும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர். அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அ.தி.மு.க-வினர் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனால் நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் இந்த முகாமில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

வசந்தகுமார்

பின்னர் பேசிய அவர், ’’மக்களுக்காகத் தான் அரசியல்வாதிகளே தவிர, அரசியல்வாதிகளுக்காக மக்கள் இல்லை. அதனால் எனக்கு இந்த மருத்துவ முகாம் குறித்து தகவல் கிடைத்ததும் ஓடோடி வந்தேன். தாய்மார்களுக்கு எதாவது ஒரு பெயரில் உதவி கிடைப்பதில் மகிழ்ச்சி. அது போன்ற இடத்தில் எப்போதுமே நான் இருப்பேன். இதில் அரசியல் பார்க்கக் கூடாது என்பது தான் எனது கருத்து. தனி நபரான என்னால் எந்த அளவுக்கு உதவ முடியுமோ அந்த அளவுக்கு நான் உதவிகளைச் செய்து வருகிறேன். தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராகவே இருக்கிறேன்’’ என்று பேசி மக்களின் பாராட்டைப் பெற்றார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியை அ.தி.மு.க-வினர் புறக்கணித்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.