வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (04/03/2018)

கடைசி தொடர்பு:08:16 (05/03/2018)

“தாய்மார்களே நீங்க ரொம்ப பேசுறீங்க!”- டென்ஷனான வைகோ

வைகோ

உங்க குழந்தைங்க நல்லா இருக்கணும்னா தயவுசெஞ்சு செல்போன் வாங்கித் தராதீங்க. நாட்டில் நடைபெறும் பல்வேறு குற்றங்களுக்கு அதுவே காரணமாக இருக்கிறது என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைகோ உருக்கமாகப் பேசினார்.

ம.தி.மு.க உயர்நிலைக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகியவை மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட ஈரோட்டிற்கு வந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அப்படியே தன்னுடைய கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டச் செயலாளர்கள் மைக் பிடித்து பேச ஆரம்பித்தும், மண்டபத்தில் கூடியிருந்தவர்களிடமிருந்து சலசலப்பு குறையவேயில்லை. பலமுறை அமைதியாக இருக்கச் சொல்லி வலியுறுத்தியும் சத்தம் குறையவே இல்லை. இதில் டென்ஷனான வைகோ, ‘இப்படி சத்தம் போட்டா, நாம பேசுறது எப்படி கேக்கும். முதல்ல அவங்க பேசி முடிக்கட்டும். அதுக்கப்புறமா நாம பேசிக்கலாம்’ என கடுகடுத்துவிட்டு பிறகு அமைதியானார். 

மாவட்டச் செயலாளர்கள் பேசி முடித்ததும் மைக் பிடித்த வைகோ, கோபம் குறையாமல், “தாய்மார்களே நீங்க ரொம்ப பேசுறீங்க!... தமிழ்நாட்டுல உள்ள எல்லா மண்டபத்துலயும் அமைதியா இருப்பாங்க. நான் பார்த்திருக்கேன். தஞ்சாவூர்ல மேடையில ஊசி விழுந்தா கூட சத்தம் கேட்கும். ஆனா, எப்ப பார்த்தாலும் ஈரோட்டுல இதே கதை தான். ‘நாங்க எல்லாம் பெரியார் மண்ணில் பிறந்த பிள்ளைகள். எங்களுக்கு எல்லாமே தெரியும். அப்படி நீங்க என்ன புதுசா அறிவுரை சொல்லீறப் போறீங்க’ன்னு நினைக்குறீங்களோ என்னமோ! நான் ஒன்னும் எனக்காகவோ, ஓட்டுக்காகவோ இங்க பேசலை. நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போட்டுக்குங்க. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை” என கடுகடுத்தவர், ஒரு வழியாக கோபத்தை கன்ட்ரோல் செய்துகொண்டு பேச்சை ஆரம்பித்தார்.

“உங்க குழந்தைங்க நல்லா இருக்கணும்னா தயவுசெஞ்சு செல்போன் வாங்கித் தராதீங்க. நம்ம நாட்டுல 4 வயசு பொண்ணுக்கு கூட பாதுகாப்பில்லை. ‘செல்போன்ல பார்த்து தெரிஞ்சிக்கிட்டு தான் ஏதோ தப்பு செஞ்சிட்டேன்’ என குற்றம் புரிந்த பலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். செல்போன் இளம் பிள்ளைகளை கெடுக்குது” என்று உருக்கமாகப் பேசியவர், “ மணமக்கள் ரெண்டு பேரும் நல்லா படிச்சிருக்காங்க. அது தான் எனக்கு பயமே. இன்றைக்கு அதிகமான மனமுறிவுகள் பட்டதாரிகள் உள்ள வீடுகளில் தான் நடக்கிறது. நானும் சம்பாதிக்கிறேன். உன் பேச்சை என் கேக்கணும்னு தான் பல பிரச்சினைகள் இங்க ஆரம்பிக்குது. சம்பாத்யம் மட்டும் வாழ்க்கையில்ல என்பதை மணமக்கள் புரிந்துகொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும்” என வாழ்த்தினார். 

தொடர்ந்து பேசியவர், “16 வருஷத்துக்கு முன்னாடி கணேசமூர்த்தி ம.தி.மு.க பொதுக்குழுவை நடத்தினார். பொதுக்குழு முடிஞ்ச உடனேயே நேரா ஜெயிலுக்கு தான் போனோம். ஆனால், இந்த முறை சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் விதமாக பொதுக்குழு அமையும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான முடிவுகளை இந்த பொதுக்குழுவில் எடுக்க இருக்கிறேன்” என உற்சாகத்துடன் பேச்சை முடித்துவிட்டு கிளம்பினார்.