"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவடையும்" – திருமுருகன் காந்தி

தூத்துக்குடியில் இயங்கி வரும் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டுவோம். இதற்கு எதிராகப் போராடிவரும் கிராம மக்களுக்கு துணை நின்று, இப்போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவடையும் என மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

  thirumurugan gandhi meets peoples

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை தனது ஆலையைவிரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிய வலியுறுத்தியும் இந்த ஆலை அருகில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 21 நாட்களாக தங்களது கிராமத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   

இந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குமரெட்டியாபுரம் கிராமத்திற்குச் சென்று கிராம மக்களை சந்தித்துப் பேசினார்.  பின் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ”துாத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையானது தொடர்ந்து காற்றையும்,  சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வேலையை செய்து வருகிறது. இதனால் மூச்சுத்திணறல், தலைவலி, முடக்கம், கண்பார்வை குறைபாடு  முதல் புற்றுநோய் வரை  பலவித நோய்களால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

thirumurugan gandhi meets people

இந்த ஆலையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சர்வதேச  அளவில் தடைவிதிக்கப்பட்ட தொழில் நுட்பமாகும். இந்த நிறுவனத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு, போராட்டக்காரர்கள் அமர பந்தல் போட்டுக்கொள்ள, காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது.  மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டை கார்ப்ரரேட்டுகளின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயல்கிறது.ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்திற்கு எதிரான வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த போது வேதாந்தா நிறுவனத்தின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதற்கு பல அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”வேதாந்தா நிறுவனத்தின் கிளைகள் உள்ள நாடுகளின் மக்கள் இந்த நீதிமன்ற நாடலாம்” என  தெரிவித்துள்ளது அந்த நீதிமன்றம்.

நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டுவோம். இதற்கு எதிராகப் போராடிவரும் கிராம மக்களுக்கு துனை நின்று, இப் போராட்டத்தை  மே-17 இயக்கம், தோழமை இயக்கங்களுடன் இணைந்து விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். இது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம். இப் போராட்டத்தை சர்வதேசப் போராட்டமாக மாற்ற வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.”என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!