வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (04/03/2018)

கடைசி தொடர்பு:07:45 (04/03/2018)

`உதயகுமார் போன்று ஒரு நடிகரைப் பார்த்ததில்லை!’ - புகழேந்தி கேலி

`ஆர்.பி.உதயகுமார் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை, ஒருநாள் மொட்டை, ஒருநாள் தாடி, ஏன்னா நடிப்புடா’ என்று அ.தி.மு.க அமைச்சர்களை நக்கலடித்து கலகலப்பூட்டினார் தினகரன் அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி.  

தினகரன் அணி சார்பாக மதுரையில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி, ''நம் துணைப்பொதுச்செயலாளர் திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது அதற்கு எதிராக முதல் போராட்டம் மதுரையில்தான் நடந்தது. அதைத்தொடர்ந்துதான் தமிழகம் முழுக்க எழுச்சி ஏற்பட்டது.

புகழேந்தி

 ஒரு சிலை வைப்பதாக இருந்தால் அதற்கொரு கமிட்டி அமைப்பார்கள். அவர்கள்தான் அதை தினமும் கவனிப்பார்கள். ஆனால், அம்மாவை அவமானப்படுத்துவதற்காகாவே இந்த சிலையை வைத்துள்ளனர். இதை முதலில் கண்டித்தவர் தினகரன். இதைப்பார்த்தபிறகும் செல்லூர்ராஜு, உதயகுமார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா, இப்போது வருகிற விளம்பரங்களில் அம்மாவுக்கு ஈக்குவலாக பொட்டு வைத்த யூதாஸ் பன்னீரும், எடப்பாடியும் படம் வைக்கிறார்கள். என்ன தைரியம்?அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா?

செல்லூர்ராஜும், உதயகுமாரும் டிஸ்கவரி சானலில் வருகிற வினோத பிராணிபோல இருக்கிறார்கள். இந்த உதயகுமார் மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லை, எந்த ஸ்கூலில் படித்தாரோ, உலக நடிப்பு. தாடி வைப்பார், மொட்டை போடுவார், சின்னம்மாதான் முதலமைச்சராக வேண்டுமென்று சொன்னவர், பின்பு காசு பார்ப்பதற்காக அங்கே இருப்பதாக சொன்னார். மறுபடியும் உங்கள் பக்கம் வந்துடுறேன்னு மேலூர் சாமியிடம் போய் சொன்னவர்தான். மறுக்க முடியுமா?... பி.ஜே.பியைக் குஷிபடுத்த பெரியாரை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்துதான் வளர்மதிக்கு பெரியார் விருதை கொடுத்தார்கள்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமைச்சர் மணிகண்டன்லாம் ஒரு டாக்டரா, இங்கதான் ஜி.ஹெச்சுல வேலை பார்த்ததாச் சொல்றாங்க, போஸ்ட் மார்டம் பண்ற டாக்டர்னு நினைக்கிறேன். நாம அ.தி.மு.க. கரை வேட்டி கட்டக்கூடாதுனு சொல்றாராம். வேட்டியோட வரலாறு தெரியுமா?. மணல் அள்ளுறதுல 30 சதவிகித கமிஷன் வாங்கினதை தடுத்த ஆர்.டி.ஓவை, டிரான்ஸ்பர் பண்ணினது மக்கள் மத்தியில அதிருப்தியை  உண்டாகினாதால இப்படி பேசியிருக்கிறார். இப்ப பணத்தை எண்ணு மணிகண்டா, தினகரன் முதல்வர் ஆனவுடன் நீ ஜெயில்ல கம்பி எண்ணுவே, இன்னும் எங்களுக்கு அஞ்சாறு பேருதான் டார்கெட், செல்லூர்ராஜு, உதயகுமரையெல்லாம் மீண்டும் சேர்க்கலாமான்னு நீங்கதான் சொல்லனும்'' என்று அமைச்சர்களை ரவுண்டு கட்டி அடித்தார் புகழேந்தி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க