”தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார் மோடி” சீறும் திருமாவளவன்

“தமிழக முதல்வரை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது தமிழகத்துக்கு செய்கிற மிகக்பெரிய துரோகம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

மோடி

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவரான ஆராயி மற்றும் தன் 14 வயது இளைய மகள் தனம் மற்றும் 8 வயது மகன் சமயனுடன் வெள்ளம்புத்தூரில் வசித்து வந்தார். கடந்த 21-ம் தேதி ஆராயி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அவரையும் தனம் மற்றும் சமயனையும் கொடூரமாகத் தாக்கினர். அதில் சிறுவன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட மற்ற இருவரும் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஆராயி மற்றும் தனம் ஆகியோரை பார்த்தார்.

அவர்களின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்பூத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோர் கடந்த 21-ம் தேதி தாக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அதே கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில்  வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு ஏதுமின்றி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதே தவிர உண்மையான குற்றவாளிகளை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமான வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், வழக்குகளின் கோப்புகள் மூடப்பட்டுவிட்டது. அந்த நிலை இந்த வழக்கிலும் ஏற்பட்டு விடக்கூடாது. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறிய வேண்டும். ஜிப்மரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் கோமா நிலையிலிருந்து மீள முடியவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. 

திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டத்தில் தலித்துகள் பாதிக்கப்படுகின்ற பல சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையிலிருப்பது வேதனைக்குரிய ஒன்று. அதனால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீத்தேன், காவிரி நீர், ஜாக்டோ-ஜியோ, நியூட்ரினோ, சாதிக்கொடுமை எதிர்ப்பு என அனைத்துப் போராட்டங்களிலும் வன்முறைகள் நிகழ்கின்றன. எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. அதேபோல பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக் கட்சிக் குழுக்களும் டெல்லி செல்வது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிக் குழுவினை சந்திக்க விரும்பவில்லை என தெரிய வருகிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் சந்தித்து பேசியதிலிருந்து இந்த தகவல் வெளியாகியது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. பிரதமர் மோடி அனைத்து மாநிலங்களுமானவர். அவர் சந்திக்க மறுப்பது என்பது தமிழகத்துக்கு செய்கிற மிகக்பெரிய துரோகம் ஆகும். கர்நாடகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே,  பாஜக அரசு தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். அதனால் இந்த சட்டப்பேரவை தேர்தலையொட்டி காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வர மாட்டார்கள் என்பது எதார்த்தமான உண்மை. மேலும், உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கின்ற வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி காவிரி நீர் மேலாண்மை அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இன்றைக்கு தமிழக முதல்வருடைய அனுமதி கோரிக்கையை பிரதமர் நிராகரித்திருக்கிறார். இது தமிழ்நாட்டை நிராகரிக்கும் செயல்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!