வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (04/03/2018)

கடைசி தொடர்பு:08:20 (04/03/2018)

ரவுடிக்குக் கேக் ஊட்டிய சம்பவம்! - சேலம் தலைமைக் காவலர் சஸ்பெண்ட்

ரவுடிக்கு கேக் ஊட்டிய இன்ஸ்பெக்டர்

சேலம் ரவுடியின் பிறந்த நாளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்த கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கருணாகரன் சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், ரவுடிகளை இன்ஸ்பெக்டரிடம் கூட்டி வந்த தலைமைக் காவலர் ஏழுமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான ஆணையை சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பிறப்பித்து இருக்கிறார்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கருணாகரன். இவர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் சேர்ந்ததும் அந்த காவல் நிலையத்தில் இருந்த ஏட்டு ஏழுமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ரவுடிகளை கூட்டி வந்து இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு அறிமுகம் செய்து வந்ததோடு ஒரு புதிய ஒப்பந்தம் போட்டார்கள்.

அந்த ஒப்பந்தப்படி தன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தாராளமாக டாஸ்மாக் சந்து கடைகளை நடத்திக் கொள்ளலாம். யாருக்கும் இடையூறு ஏற்படாதபடி விபசாரமும் செய்து கொள்ளலாம். திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுப்பட்டால் ஸ்டேஷனுக்கு தனி கமிஷன் கொடுத்து விட வேண்டும். ஆள் கடத்தல், கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. இதற்காக மாதம் தோறும் ஸ்டெஷனுக்கு 5 வழக்குகளும், இஸ்பெக்டருக்கு 3 லட்சம் மாமூல் கொடுக்க வேண்டும்.

இதனால் கன்னங்குறிச்சி காவல்நிலையம் ரவுடிகளின் சொர்க்கபுரி ஆனது. காவலர்கள் ரவுடிகளுக்கு சல்யூட் அடித்ததோடு இன்ஸ்பெக்டருக்கு முன்பு எஸ்.ஐ., எழுந்து நின்று ரவுடிகளுக்கு இருக்கைகள் கொடுக்கும் நிலை உருவானது. இதையடுத்து கடந்த மாதம் 15-ம் தேதி சேலத்தின் பிரபல ரவுடி சுசீந்தரன் பிறந்த நாளையொட்டி, ஏட்டு ஏழுமலை ரவுடிகள் சுசீந்தரன், சொக்கலிங்கம், குட்டி, பழனி ஆகியோரை இஸ்பெக்டர் வீட்டுக்கு கூட்டி சென்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.அதீத பாசத்தின் காரணமாக இன்ஸ்பெக்டர் கருணாகரன், ரவுடி சுசீந்தரனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை சேலம் காவல்துறை ஆணையர் சங்கர் விசாரணை நடத்தினார். அதையடுத்து  இன்ஸ்பெக்டர் சென்னைக்கு மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், ரவுடி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக தலைமைக் காவலர் ஏழுமலையை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் சங்கர் நேற்று (3.3.2018) உத்தரவிட்டுள்ளார்.