வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:10:30 (04/03/2018)

`உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்!' - மத்திய அரசை எச்சரிக்கும் நாராயணசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரிக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடியை நானும், அமைச்சர்களும் சந்தித்து புதுச்சேரியின் நிதி நிலை குறித்து எடுத்துக் கூறினோம். புதுச்சேரிக்கென தனிக் கணக்கு தொடங்கியபோது மத்திய அரசு மானியமாக கொடுத்திருந்த 2,177 கோடி ரூபாய் கடனாக மாற்றப்பட்டது . இதுவரை அதற்கு வட்டியாக மாநில அரசு 1,033 கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளது. அதனால் அந்தத் தொகையை மத்திய அரசு திருப்பித்தர வேண்டும் என்றும் ஆறாவது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை, தானே புயல் நிவாரண நிலுவைத்தொகை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான 1,055 கோடி ரூபாயையும், திட்டமில்லா செலவுகளுக்கு செய்த தொகையையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டோம். மாநில அரசுகளுக்கு திட்டமில்லா செலவிற்காக 42 சதவிகிதம் மத்திய அரசு நிதியுதவி தருகிறது.

ஆனால் புதுச்சேரிக்கு 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக ஆக குறைத்து 27 சதவீதம் மட்டுமே தருகிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கும், நிதி நிலையை சரி செய்யவும் மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். முன்னாள் முதல்வர் ரங்கசாமி அரசு நிறுவனங்களில் அதிகப்படியான ஆட்களை நியமித்துள்ளதால் சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இதை சரி செய்ய ஓய்வு பெற்ற தலைமை செயலர் விஜயன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 202 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நிதி கேட்டோம். பிரதமர் எங்கள் கோரிக்கைகளை ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். ஆனால் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள  ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவைகளை பட்டியலிட்டாரே தவிர தனியாக எதையும் அறிவிக்கவில்லை.

நாராயணசாமி

முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் போன்றவர்கள் புதுச்சேரிக்கு வருகை தரும்போது புதுச்சேரி மக்களுக்கெனெ சில நிதிச்சலுகைகளை அளித்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி அப்படி எந்த நிதிச் சலுகையையும் அறிவிக்கவில்லை. புதுச்சேரிக்கு வந்து நிதி ஏதும் அறிவிக்காமல் சென்ற ஒரே பிரதமர், மோடிதான். மத்திய அரசு, ஆளும் கட்சி மாநிலம், எதிர்க்கட்சி மாநிலம் என பாரபட்சம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது. நிரவ் மோடியின் 11,700 கோடி ரூபாய் மோசடி தற்போது 22 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல இந்தியன் வங்கியில் நடந்த 6,712 கோடி ரூபாய் ஊழல் குறித்து 2016-ம் ஆண்டே சி.பி.ஐயிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தற்போது ரூ.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுவது இந்த ஆட்சியில் அதிகம் நடைபெறுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதனால் மகள் கொலை வழக்கில் சிறையில் உள்ளவரின் வாக்குமூலத்தை வைத்து, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இறுதியில் கார்த்திக் சிதம்பரம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். இதற்கு தனி நபர் கூட வழக்கு தொடுக்கலாம். தமிழகமும், கர்நாடகமும் சேர்ந்து புதுச்சேரிக்கு நீர் தராமல் வஞ்சிக்கிறது. மக்கள் பிரச்சனைக்காக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கித்தர கேட்டால் தர வேண்டும். புதுச்சேரி பயணத்தில் மாநில அரசுக்கு செய்ய வேண்டிய கடமையை பிரதமர் செய்ய தவறிவிட்டார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க