வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (04/03/2018)

கடைசி தொடர்பு:10:00 (04/03/2018)

`காதைப் பிளக்கும் ஒலியுடன் சினிமாப் பாடல்கள்!’ - அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு எதிராகக் கொந்தளித்த மாணவர்கள்

தனியார் பேருந்துகளை விஞ்சும் அளவுக்கு அரசுப் பேருந்துகளில் பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு அவர்களிடம் விவரம் கேட்டோம். ‘’என் பெயர் அருள். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகிறேன். எப்போதும் போல நானும் என் நண்பர்களும், கல்லூரி முடிந்து கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறினோம். செங்கோட்டையில் இருந்து கம்பம் செல்லும் அரசுப் பேருந்து அது. வண்டி எண்: TN57 N1287. பஸ்ஸில் ஏறியதும் காதைப் பிளக்கும் சத்தத்தில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு குத்துப்பாட்டு.!

கானாவிலக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு 10 ரூபாய் டிக்கெட். பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து ’புது பஸ்டாஸ்ண்ட்’ என்று சொன்னோம். பாடல் சத்தத்தில் அவருக்கு நாங்கள் சொல்வது முதலில் கேட்க ல்லை. பின்னர் சத்தமாக சொல்லிய பின்னர் டிக்கெட் கொடுத்தார். அப்போது பேருந்தில் பீப் சாங் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் சத்தமாக.! இதனால் சிலர் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர். அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்ததால்  கண்டக்டரிடம், சத்தத்தைக் குறையுங்கள் என்று சொன்னோம். டிரைவரிடம் போய் சொல்லுங்கள் என்றார்.

உடனே, டிரைவரிடம் போய், சத்தத்தை குறைக்கச் சொன்னோம். அவர், ’காலையில் இருந்து பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிறேன். பாட்டு இல்லையென்றால் தூங்கிவிடுவேன்’ என்றார். சரி, “சத்தத்தை குறையுங்கள்” என்றோம். முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்குள் பேருந்தில் இருந்த பலர் கண்டக்டரிடம் சத்தத்தைக் குறைக்கச் சொல்லி வாக்குவாதம் செய்தனர். கண்டக்டர் “முடியாது” என்றார். உடனே, தேனி டிப்போவிற்கு தொடர்புகொண்டு தகவல் சொன்னோம். அங்கிருக்கும் அதிகாரி ஒருவர் கண்டக்டரை தொடர்புகொண்டு பேசினார். அந்த அதிகாரியிடமும், “பாடலின் சத்தத்தைக் குறைக்க முடியாது” என்றார் அவர்.

அதற்குள் பஸ் புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டது. அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் சொன்னேம். அவர்கள், அந்த கண்டக்டர், டிரைவரிடம் பேசினார்கள். பின்னர் தான் சத்தம் குறைக்கப்பட்டது. அதற்குள், கம்பம் செல்பவர்கள் பலர், கீழிறங்கி தனியார் பேருந்தில் ஏறி சென்றுவிட்டனர். தனியார் பேருந்தை விட அதிக கட்டணம் அரசுப் பேருந்தில் வசூலிக்கப்பட்டாலும் பாதுகாப்பாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் வரும் பொதுமக்களை இப்படி பீப் சாங் போட்டு வஞ்சிப்பது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்றனர்.