”அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம்!” - கடம்பூர் ராஜூ பளீச் | Stalin will not become chief minister, says Kadambur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (04/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (04/03/2018)

”அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம்!” - கடம்பூர் ராஜூ பளீச்

“தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் ஒரு கனவு முதல்வர். பகலிலும் இரவிலும் எப்போதும் முதல்வர்கள் கனவிலேயே இருக்கிறார் . அவர் கனவில்தான் முதல்வராக ஆட்சி செய்ய முடியுமே தவிர நிஜத்தில் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

chellapandian speech

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர், செல்லப்பாண்டியன்,  “தூத்துக்குடிக்கு 4வது பைப்லைன் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது அ.தி.மு.க., தான். தி.மு.க., அறிவித்து செயல்படுத்தியது போல பரப்புரை செய்து வருகிறார்  தி.மு.க., கீதாஜீவன். என் தொகுதிக்குள் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு கொடுக்கவில்லையே? என கொந்தளித்துப் பேசிய அவருக்கு, அடுத்தடுத்த நிகழ்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் வரமுடியவில்லையே ஏன்? நல்ல திட்டங்களை செயல்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அ.தி.மு.க., அரசைக் குறை கூறுகிறார். எல்லா திட்டத்திலும் கமிசன் வாங்கி வரும்  உங்க சரித்திரம் எங்களுக்கு தெரியாதா? எங்கெங்கு எவ்வளவு வாங்கினீர்கள் என்பதை பட்டியல் போட்டுச் சொல்லவா?” என தூத்துக்குடி தொகுதி தி.மு.க,, எம்.எல்.ஏ., கீதாஜீவனை விளாசினார்.

கடம்பூர் ராஜு      

இறுதியாகப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ அ.தி.மு.க.,வில் சாதாரண ஒரு தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம் என்பதற்கு உதாரணம்தான் ஓ.பி.எஸும், இ.பி.எஸும். ஆனால், தி.மு.க.,வில் அப்படியா?  கருணாநிதியின் குடும்ப ஆட்சியில் வாரிசுகளுக்குத்தானே முக்கியப் பதவிகள் முதல் முதலமைச்சர் பதவி வரை கிடைக்கும். தி.மு.க.,வில்தான் செயல்படுவதற்கு ஒரு தலைவர். செயல்படாமல் இருக்கிறார்  மற்றொரு தலைவர். பகலிலும் இரவிலும் எந்த நேரமும் முதலமைச்சர் கனவுடனேயே இருக்கிறார் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின். அவரால், கனவில் மட்டும்தான் முதலமைச்சராக முடியும். ஆட்சி செய்யவும் முடியும். அவர் ஒரு கனவு முதல்வர்.

கடம்பூர் ராஜு

இலட்சியக் கனவு மட்டும்தான் பலிக்கும். பேராசைக் கனவு பலிக்குமா? ஸ்டாலினின் கனவு பேராசைக் கனவு.  பேராசைப்பட்டால் பெருத்த நஷ்டம்தான் விளையும். அவரது முதல்வர் கனவு ஒருபோதும் நிஜமாகாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கும் மேலாக தலைமைச் செயலகத்தில், ஸ்டாலினிடம்  அடுத்ததாக என்ன செய்யலாம் என ஆலோசனையும் நடத்தி உள்ளார் முதல்வர் எடப்பாடி. பாரபட்சம் இல்லாமலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழு மூச்சாகவும் செயல்பட்டு வருகிறது இந்த அரசு.  ” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க