’நேற்றிரவுக் கூட போனில் நல்லாதான் பேசினான்!’ - ஜெ., சமாதியில் தற்கொலை செய்து கொண்ட காவலரின் தந்தை கண்ணீர்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (04/03/2018) அதிகாலை ஆயுதப்படை காவலர் அருண்  ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை செய்துகொண்ட அருண்ராஜ்

அருண்ராஜ் குறித்து அவரின் உறவினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பின்வருமாறு.. ”மதுரை மாவட்டம்  அவனியாபுரம் அருகே பெருங்குடியை சேர்ந்தவர் மலை ராஜன். அவரின் மகன்  அருண்ராஜ்  (வயது 27).  பி.காம் பட்டப்பட்ட படிப்பு படித்த இவர் சிறுவயது முதலே விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளை குவிப்பார். மேலும் போலீஸ் ஆக வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. அருண்ராஜின் கனவு நனவானது. தமிழக காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக பணியில் சேர்ந்தார் . காவல்துறை சார்பாக நடத்தப்படும்  விளையாட்டு மற்றம் போலீஸ்  பைக் அணிவகுப்பு போன்றவற்றில் ஆர்வமாக கலந்து கொள்வார். இவர் மிகுந்த மன உறுதியும் தைரியம் கொண்டவர்.  இன்று காலை ஜெயலலிதா சமாதி முன்பு பணியில் இருந்த போது அருண், துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டத் தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். பணி சுமை காரணமாக இறந்தாரா இல்லை வேறு ஏதும் அவருக்கு பிரச்சனையா என்று உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்” என்றனர். 

அருண்ராஜ் மரணம் குறித்து அவரின் தந்தை மலைராஜன் பேசுகையில் ‘அருண் நேற்றிரவுக் கூட என்னிடம் செல்போனில் பேசி பணம் அனுப்புவதாக கூறினார். அப்போது கூட இயல்பாகத்தான் பேசினார்.  உறவினர்கள் பற்றியெல்லாம் விசாரித்து மகிழ்ச்சியாக பேசியபின் போனை வைத்தார். இன்று காலை 6 மணிக்கு ஆயுதப்படை ஆய்வாளர் போனில் அழைத்து ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று கூறினார். அருண் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. என் மகனின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார் கண்ணீரோடு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!