கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா! - அம்மனின் தசாவதாரம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு (03/03/2017) தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து அவதாரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சிக்கொடுத்தார். 

தசாவதாரம்

 

 

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்ரவரி 16ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. வரும் 6ம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறவிருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது இந்த கோயில். கொடிமரம், மூலஸ்தான அம்மன், கோபுர கலசம் மூன்றையும் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது இந்த கோயிலின் சிறப்பு. அனைத்து மதத்தினரும் வழிபடும் மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக கோட்டை மாரியம்மன் கோயில் விளங்குகிறது. திண்டுக்கல்லின் காவல் தெய்வமாக இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியதும் திண்டுக்கல் களைகட்டிவிடும். திண்டுக்கல் நகரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் சாரை சாரையாக பக்தர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வு தசாவதாரம். தமிழகத்தில் வேறு எந்த அம்மன் கோயில்களிலும் இல்லாத சிறப்பான நிகழ்வு. நேற்று இரவு அம்மன் பத்து அவதாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட பத்து அவதாரங்களில் அம்மன் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தசாவதார நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும், நாளை இரவு ஊஞ்சல் உற்சவமும், 6\ம் தேதி இரவு தெப்ப உற்சவத்துடனும் மாசித்திருவிழா நிறைவு பெறவிருக்கிறது. தெப்ப உற்சவத்தின் போது அம்மன் சயனகோலத்தில் காட்சியளிப்பது இந்த கோயிலில் மட்டும்தான். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!