யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை அதிகாரியின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது! தேனி ஆட்சியர் நேரில் அஞ்சலி

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி மணிகண்டனின் உடல் சொந்த  ஊரான கம்பத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  

தேனி மாவட்டம் கம்பம் கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (46). குடிமைப் பணிகள் தேர்வெழுதி 2001ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக பணியில் இணைந்தார். கர்நாடக மாநிலம் நாகர்கோலே புலிகள் காப்பகத்தில் முதன்மை வனப்பாதுகாவலராகவும், கள இயக்குனராகவும் பணியாற்றிவந்தார். இந்நிலையில், நேற்று, கபினி அணைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீயை அணைக்கும் பணிக்காக வன அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய வனக்குழுவுடன் தீப்பிடித்துள்ள இடத்திற்குச் சென்றார் மணிகண்டன். அங்கே காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியே வந்து வனக்குழுவினரை விரட்டியிருக்கிறது. அதனை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் ஓடியிருக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாக மணிகண்டன் மட்டும் யானையிடம் அகப்பட, யானையால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் மணிகண்டன். இதனைக் கண்ட வனக் குழுவினர், சத்தம் எழுப்பி யானையை விரட்டிவிட்டு, மணிகண்டனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனெவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். மணிகண்டனின் உடல் அவரது சொந்த ஊரான கம்பத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் அஞ்சலி செலுத்தினார். மணிகண்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மணிகண்டனுக்கு சங்கீதா (40) என்ற மனைவியும், நித்திலா (15) என்ற மகளும், கபினேஷ் (8) என்ற மகனும் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!