’கடின உழைப்பைப் புறக்கணிக்கும் இதயமற்ற செயல்!’ -  2.0 டீசர் விவகாரத்தில் கொதிக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த் 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது என சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சவுந்தர்யா
 

ரஜினிகாந்த் - ஷங்கர் காம்போவில் பிரமாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். 2.0 திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படதயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்திருந்தது. மேலும், சன் டிவியில் இன்று (04/03/2018) மாலை ஒளிபரப்பாக இருக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் 2.0 கிராபிக்ஸ் மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட இருக்கின்றன.  

இந்நிலையில் இன்று காலை  1.27 நிமிடங்கள் ஓடும் 2.0 படத்தின் டீசர் இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது படக்குழுவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசரும் இணையத்தில் லீக்கானது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், ’2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பாகவே திருட்டுத்தனமாக இணையத்தில்  பதிவேற்றப்பட்டது சகித்துக் கொள்ள முடியாதது. ஒரு சில நொடி உற்சாகத்துக்காக,  திரைப்படத்தை உருவாக்குபவர்களின் கடின உழைப்பையும், உணர்வுகளையும் சீரழிக்கும் இதயமற்றச் செயலாகும். டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!