வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:16:30 (04/03/2018)

`தேசம் தலை வணங்குகிறது’ - தமிழக வனத்துறை அதிகாரி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்த தமிழக வனத்துறை அதிகாரி மணிகண்டன் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Photo Credit: Facebook/Association For Biodiversity Conservation & Research

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கர்நாடக மாநிலம் நாகரகொலெ புலிகள் காப்பகத்தில் முதன்மை வனப்பாதுகாவலராகவும், கள இயக்குனராகவும் பணியாற்றிவந்தார். 
கபினி அணை அருகில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க அப்பகுதிக்குத் தனது குழுவினருடன் அந்தப் பகுதிக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை, திடீரென வெளியே வந்து வனக்குழுவினரை விரட்டியது. அந்த யானை தாக்கியதில், வனத்துறை அதிகாரி மணிகண்டன் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அவர் ஏற்கெனெவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உயிரிழந்த மணிகண்டனின் உடல் அவரது சொந்த ஊரான கம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் அஞ்சலி செலுத்தினார். மணிகண்டன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், மணிகண்டனின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ``நாகெர்கொலெ புலிகள் காப்பகத்தில் பணிபுரிந்து வந்த இந்திய வனத்துறை அதிகாரி மணிகண்டனின் துரதிருஷ்டமான உயிரிழப்பு குறித்த செய்தி வேதனை அளிக்கிறது. அவருக்கு இந்த நாடு தலைவணங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.