வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:12:11 (05/03/2018)

''ஏழு வயதிலிருந்து 37 வயதுவரை சகித்துவிட்டேன். இனி வெடிப்பேன்!" #SpeakUp

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

எனக்கு இப்போது 37 வயது. என் உடல் மீது முதன்முறையாக வன்முறை நிகழ்த்தப்பட்டபோது, ஏழு வயதுச் சிறுமி நான். அப்போது, குட் டச், பேட் டச் பற்றியோ, 'கத்திவிடு' என்றோ எனக்கு யாரும் அறிவுறுத்தியிருந்தால், ஒருவேளை அந்தக் கசப்பான சம்பவத்திலிருந்து தப்பித்திருப்பேன்.

SpeakUp

பருவ வயதில், சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும்போது, என் உடலைப் பற்றி ஆபாசமாகப் பேசியபடி இன்னொரு சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தவனிடம் இருந்து தப்பிக்க, எகிறிய என் இதயத் துடிப்புக்கு நிகராக சைக்கிள் பெடல்களை வேகமாக அழுத்துவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை, பிரேக் பிடித்து நின்று, அவனைத் எதிர்த்துப் பேசும், கண்டிக்கும், தேவைப்பட்டால் தண்டிக்கும் உரிமை எனக்குள்ளது, 100% உள்ளது என்பது அன்று எனக்குத் தெரிந்திருந்தால், தொடர்ந்து என் உடல் தீண்டப்பட்டபோதெல்லாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டிருந்திருக்க மாட்டேன். 

பேருந்துப் பயணத்தில், பின் சீட்டில் அமர்ந்திருந்தபடி இருக்கையின் இடைவெளிக்குள் கையைவிட்டு ஒருவன் தடவியபோது, அப்போது என்னால் முடிந்தது சீட்டின் நுனியில் நகர்ந்து அமர்ந்துகொண்டது மட்டுமே. ஒருவேளை, பாலியல் சீண்டல்களுக்கு எதிராக ரியாக்ட் செய்த சக பெண்களின் அனுபவங்களை நான் அப்போது வாசிக்க நேர்ந்திருந்தால், நானும் அவனைக் கண்டித்திருப்பேன். மாறாக, ஓர் அயோக்கியனிடம்  அச்சம்கொண்டிருக்க மாட்டேன். திருமணமாகி, மொழி புரியாத வெளிநாட்டுக்கு வந்த பிறகும், பெண் என்பவள் ஆணைப் பொறுத்தவரை உடல்தான் என்று நிரூபித்தான் வெள்ளைக்காரன் ஒருவன். ஒரு பொது இடத்தில் வரிசைக்காகக் காத்திருக்கையில், தன் உறுப்பைத் தூக்கிக் காட்டி சைகை செய்தான். அவனிடமிருந்து தப்பிக்க, வரிசையும் வேண்டாம், வந்த வேலையைக்கூட முடிக்க வேண்டாம் என அவஸ்தையுடன் அவசரமாக வீடு திரும்பினேன். அதே வரிசையில் எனக்குப் பின்னரும் பல பெண்களிடம் அவன் அவ்வாறு வன்முறை செய்திருக்கலாம். 'இவன் இப்படிச் செய்தான்' என்று அங்கிருப்பவர்களிடம் உரக்கச் சொல்லும் தைரியம் எனக்கோ, அந்தப் பெண்களுக்கோ இருந்திருந்தால், இதுபோல் மற்ற பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். என் இரண்டு வயதுக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்தபோது, எனக்கே எனக்குச் சொந்தமான இந்த உடம்பு மீண்டும் ஓர் அந்நியக் கையால் தீண்டப்பட்டபோது, இறங்க வேண்டிய இடத்துக்கு இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பே இறங்கியதைத் தவிர, தப்பிக்க அப்போது வேறு வழி தெரியவில்லை எனக்கு. 

#SpeakUp என்றால், ஆயிரக்கணக்கில் இல்லை, லட்சக்கணக்கில் இதுபோன்ற குமுறல்களை பெண்கள் கொட்டித் தீர்ப்பார்கள்தான். ஆனால், நமக்குத் தேவை குறைகளைக் கேட்கிற #SpeakUp இல்லை. குறைகளைத் தீர்க்கிற #SpeakUp. அதாவது, இதைப் படித்துவிட்டுக் கடந்துவிடாமல், இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளப்போகும் தைரியமே முக்கியம். 

இனி, ஒருவேளை நான் பாலியல் தீண்டலை எதிர்கொள்ள நேர்ந்தால், விலகி ஓடப்போவதில்லை. செய்தவனை நேருக்கு நேர் கண்டிக்கும் துணிவை, அவனைத் தலைகுனிய வைக்கும் தைரியத்தை, இந்த 37 வயதில் பெற்றிருக்கிறேன். என்னைப்போல அஞ்சி நடுங்கியிருந்த பெண் நெஞ்சங்களுக்கு தைரியம் கொடுக்கும், தட்டியெழுப்பும் பல சகோதரிகளின் #MeToo, #SpeakUp குரல்கள், என்னை அதற்குத் தயார்படுத்தியிருக்கின்றன. என் குரலும் அப்படியாக மற்ற பெண்களுக்கு இருக்கவே, இதை எழுதுகிறேன். 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்! 

Speak-Up

உங்கள் குரலைப் பதிவு செய்ய http://bit.ly/vikatanspeakup