2 மூட்டைக்குள் 5 மண்டை ஓடுகள்! - கதிகலங்கும் சேலம் கல்லறைத் தோட்டம் | Skulls found in garbage - salem horror

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (04/03/2018)

2 மூட்டைக்குள் 5 மண்டை ஓடுகள்! - கதிகலங்கும் சேலம் கல்லறைத் தோட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே ஆங்கிலேய கிறிஸ்தவ கல்லறை தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இரண்டு மூட்டைகளின் மனித எலும்பு கூடுகளை வீச்சி சென்றது சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லறை தோட்டம்

 

இதுப்பற்றி கல்லறை தோட்டத்தில் வசித்து வரும் கதிரவன், ''இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சேலத்தில் ஆட்சியில் புரிந்த ஆங்கிலேய அதிகாரிகள், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மரணம் அடைந்தவர்களை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டு அக்காலத்திலேயே கல்லறைகள் கட்டப்பட்டு அவர்களுடைய பெயர்கள், அவர்கள் வகித்த பதவிகள் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த கல்லறைகளை சுற்றி பெரிய மதில் சுவர்கள் எழுப்பி கல்லரைத் தோட்டமாக உருவாகினார்கள். காலப்போக்கில் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு இந்த கல்லறைத்  தோட்டம் அதன் அருகில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஆங்கிலேயர்களின் வழித் தோன்றல்கள் அவ்வபோது வந்து முன்னோர்களுக்கு மறியாதை செய்து விட்டு செல்லுகிறார்கள்.

இந்த கல்லறை தோட்டத்தின் ஓரமாக நான் மெக்கானிக் ஷாப் வைத்துக் கொண்டு இந்த கல்லறை தோட்டத்தை பாதுகாத்தும் வருகிறேன். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இரண்டு மூட்டைகளை வீசி விட்டு சென்றார்கள். என் நண்பர்களை அழைத்து வந்து மூட்டைகளை பிரித்து பார்த்ததில் மனித எழும்பு கூடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதையடுத்து டவுன் ஸ்டேஷனுக்கு புகார் கொடுத்தோம். அதையடுத்து அவர்கள் வந்து மூட்டையை பிரித்து பார்த்ததில் 5 மண்டை ஓடுகளோடு, கை, கால் எலும்புகள் இருந்தன'' என்றார்.

இதையடுத்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, '' சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சில சிவன் கோவில்களில் மண்டை ஓட்டை எடுத்து வந்து பூஜை செய்து விட்டு மீண்டும் சுடுகாட்டில் எரிந்து விடுவார்கள். இந்த பழைய மண்டை ஓடுகளை பார்க்கும் போது அப்படி யாராவது எடுத்து வந்து பூஜை செய்து விட்டு சுடுகாடு என நினைத்து இந்த கல்லறை தோட்டத்தில் போட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் பல கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.