அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு

குமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி அவரது தலைமை பதிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

அய்யா வைகுண்டர்

ஆண்டு தோறும் மாசி 20-ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை அவரது வழியைப் பின்பற்றும் ’அன்புக் கொடி மக்கள்’ கொண்டாடுகிறார்கள். முக்காலமும் உணர்ந்து அதனை அகிலத் திரட்டு மூலம் அருளியவர், வைகுண்டர். கடவுளின் அவதாரமாகவும், ஆன்மீக சீர்திருத்தம் செய்தவருமான அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை தலைமை பதி அமைந்துள்ள சாமித் தோப்பில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

இந்தியா முழுக்கப் பரவி வியாபித்துள்ள அய்யா வைகுண்டரின் தருமபதிகளுக்கு எல்லாம் தலைமைப் பதியாக சாமித் தோப்பு திகழ்கிறது. அதன் துணைத் தலங்கள், தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் நாடுமுழுவதும் எண்ணற்ற இடங்களில் இருக்கின்றன. இன்று அய்யா வைகுண்டரின் 185-வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் ஊர்வலமாக கர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் வந்தடைந்தது. 

பின்னர், நாகராஜாகோவில் திடலில் இருந்து புறப்பட்ட அவதார தின ஊர்வலம் மணிமேடை, கோட்டார், இடலாக்குடி, சுசீந்தரம், வழியாக சாமித் தோப்பு அய்ய வைகுண்டர் தலைமை பதியை வந்தடைந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஊர்வலத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் அனைவரும் தலைமை பதியில் அய்யா வழிபாட்டு முறையைப் பின்பற்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!