பெண்களின் சபரிமலையான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்!

பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தின் திருவிழா இன்று (மார்ச் 4-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை இந்தக் கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன.

பகவதி அம்மன் கோயில்

பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பான வகையில் பக்தர்களின் கவனத்தைப் பெற்றத் தலம், கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்க்கு பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து செல்வதைப் போலவே இந்தக் கோயிலுக்கு வருவதற்காக கேரளாவில் உள்ள பெண்கள் பலரும் 41 நாட்கள் விரதம் கடைபிடித்து இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு கால் நடையாக வருகிறார்கள். 

கோயில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அம்மன் புற்று உருவத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார். வருந்தோறும் இந்தப் புற்று வளர்ந்து வருவதாக நம்பிக்கை உள்ளது.பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் மாசி திருவிழா இன்று (மார்ச் 4-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 13-ம் தேதி வரை இந்தக் கோயிலில் விழா நடைபெறுகிறது.

இந்தக் கோயிலின் கொடியேற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 9-ம் தேதி நள்ளிரவில் வலியபடுக்கு பூஜை நடக்கிறது. 10-வது நாளில் ஒடுக்கு பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி 13-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!