வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (04/03/2018)

302 கிராம நூலகங்கள்.. ரூ 30 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்! - மாவட்ட நிர்வாகத்தின் அசத்தல் ப்ளான்

நெல்லை மாவட்டத்தில் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்கள், பொதுமக்களிடம் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்; 302 கிராம ஊராட்சி நூலகங்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.. இந்த நடவடிக்கையை எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். 

நூலகத்துக்கு புத்தகங்கள்

நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உதவி ஆட்சியர் இளம்பகவத் ஆகியோரின் சீரிய முயற்சியின் காரணமாக கடந்த 4 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த விழாவின் போது ஒவ்வொரு நாளும் மக்கள் பயன் அடையும் வகையில் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்து வந்து கருத்தரங்கங்கள், கவிதை வாசிப்பு, கிராமிய நிகழ்ச்சிகள், உடல் நலன் சார்ந்த கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

நெல்லை புத்தகத் திருவிழாவில், 110 அரங்கங்கள் மூலமாக சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு புத்தக விற்பனை நடைபெற்றது. மக்களிடம் இந்த அளவுக்கு இருக்கும் புத்தகங்களை வாசிப்பது குறித்த ஆர்வமும் அக்கறையும் மாவட்ட நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 302 கிராம ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, நெல்லை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற 22 பதிப்பகங்கள் மூலம் 147 தலைப்புகளிலான புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன. மொத்தம் 44,394 எண்ணிக்கையிலான புத்தகங்கள் கிராம ஊராட்சி நூலகங்களுக்காக வாங்கப்பட்டது. இந்த நூல்களின் மொத்த மதிப்பு ரூ.46,55,934 ஆகும். இதில் தள்ளுபடி தொகையான 16,40,177 ரூபாயைக் கழித்தது போக நிகரத்தொகையாக ரூ.30,15,756 மதிப்பிலான புத்தகங்கள் வாங்கப்பட்டு கிராம ஊராட்சி நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.

எழுத்தாளர் நாறும்பூநாதன்மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இது பற்றிப் பேசிய எழுத்தாளரான நாறும்பூநாதன், ’’புத்தகங்கள் தான் மனிதனை முழுமைப்படுத்துகின்றன. கிராமப் பகுதியில் வசிப்பவர்களுக்கு புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலைத் தீர்க்கும் வகையில் அரிய புத்தகங்களைத் தேர்வு செய்து வழங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் கிராமப் பகுதி மாணவர்களின் சிந்தனை மேம்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது’’ என்றார்.

கிராம நூலகங்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்யும் விழா தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத்தலைவர் மயன் ரமேஷ்ராஜா, பொருளாளர் பேராசிரியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சண்முகதாய், மாவட்ட மைய நூலகர் முத்துகிருஷ்ணன், பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் பேரா, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.