வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:19:30 (04/03/2018)

பலி வாங்க காத்திருக்கும் தெப்பக்குளம் மழை நீர் கால்வாய்! - அச்சத்தில் மக்கள்

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பகுளத்திற்கு அதன் சுற்றி உள்ள கோயில்களுக்கு  தினமும் நூற்றுக்கணக்கான சுற்றால பயணிகள் வந்து செல்கின்றனர் .

 

தெப்பக்குளம்

 

தெப்பத்தை சுற்றி பழமையான கல்லூரிகள், மருது பாண்டியர் சிலை மாரியம்மன் கோயில், காவல்நிலையம், மண்டபங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பதால், அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக அது விளங்குகிறது. இந்நிலையில் மழை நீரை தெப்பகுளத்திற்குள் கொண்டு  செல்லப்படும் கால்வாய் மிகவும் மோசமான நிலையில் திறந்து இருப்பதால் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் உள்ளே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த க.அசோக்குமார் கூறுகையில் "கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை (25/2/18) அன்று மாலை 7:30 மணி அளவில் நானும் எனது குடும்பத்தினரும் பொழுதுபோக்கிற்காக மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது நடந்து நிகழ்வு எங்களையும் அங்கு சுற்றியிருந்த மற்றவர்களையும் பதறவைத்தது. கல்லூரி பயிலும் பெண்கள் சிலர் பைரவர் கோவிலுக்கு சென்றுவிட்டு சாலையை கடந்து தெப்பகுளம் ஒட்டிய நடைபாதையில் நடந்துவந்தனர் அதில் ஒருவர் போதிய வெளிச்சம் இன்மையின் காரணமாக தவறி மழைநீர் வடிகாலுக்காக அமைக்கபட்டு மூடபடாத வாய்க்காலில் விழுந்தார். அவரது தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நானும் அங்கு இருந்த மற்றவர்களும் சேர்ந்து முதலுதவி அளித்து  மருத்துவமனை செல்லுமாறு ஆட்டோவில் அனுப்பிவைத்தோம்.

இந்நிலையில்  இன்று காலை நான் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது  50வயது மதிக்கதக்க முதியவருக்கும் இதே நிலை ஏற்பட்டது . வலியால் துடித்த முதியவர் பார்த்து மனம் வேதனை அடைந்தது பல முறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை . எனவே மதுரை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இந்த புராதன இடத்தையும் பொதுமக்களை நிலை கருத்தில் கொண்டு இதற்கு உடனடியாக பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் மற்றும் தெப்பகுளத்தை சுற்றி மின்விளக்கு வசதி அமைத்துதரவேண்டும்’ என்றார்  .