வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:21:21 (04/03/2018)

'ஈ.பி.எஸ்-க்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை' - மு.க.ஸ்டாலின் விளாசல்!

காவிரி விவகாரத்தில் நிதின் கட்காரியை சந்தித்து எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு க ஸ்டாலின்

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்பு காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று முதல்வருடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார் என தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அமைச்சர்கள், முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பின், பிரதமரை சந்திக்கலாம் எனத் தெரிவித்தனர். இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், "மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை என ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அதனால் அவரை சந்திப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமரை சந்திப்பதை என்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நீர்வளத்துறை சந்திக்க வேண்டும் என்று கூறினால் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதை முதல்வரிடம் கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கர்நாடகாவில் விரைவில் தேர்தல் வர இருப்பதால் பிரதமர் சந்திப்பு சாத்தியமே இல்லை. இருப்பினும் 
எந்தக் காரணம் கொண்டும் பிரதமரை சந்திப்பதில் இருந்து பின் வாங்க மாட்டோம். 

பிரதமர் சந்திக்க மறுத்தால் அதிமுக, திமுக ராஜினாமா செய்வோம் என கூறுமாறு முதல்வரிடம் தெரிவித்தேன். ஆனால் முதல்வர் அவ்வாறு கூற மாட்டார். அவருக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை. கெடுதல் செய்வதற்காக கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார்கள். இதனால் சட்டப்பேரவையை கூட்டி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினேன். அதற்கு கண்டித்து தீர்மானம் போட வேண்டாம், பதிலாக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம் என்று கூறுகிறார்கள். பத்திரிக்கையாளர்களிடம் நான் பேசி சென்ற அடுத்த நொடியே அதை அமைச்சர்கள் மறுக்கிறார்கள். பேட்டியில் எந்த ஒரு விஷயத்தையும் நான் தவறாக குறிப்பிடவில்லை. நான் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருப்பதை விட தொண்டர்களுக்கு இருக்கிறது" என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க