ஊடகங்களால் மட்டுமே கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகின்றனர் - அர்ஜூன் சம்பத் தாக்கு!

ஊடகங்களால் மட்டுமே கம்யூனிஸ்டுகள் உயிர்வாழ்கின்றனர். தோன்றிய இடத்திலேயே தோல்வி கண்டவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

அர்ஜுன் சம்பத்

தூத்துக்குடியில் அய்யா வைகுண்டர் அவதார திருநாளை முன்னிட்டு நடைபெற்ற, இலவச சித்த மருத்துவ முகாமை துவக்கி வைக்க இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், "நாங்கள் நடத்திய போராட்டத்தால் தான் அய்யா வைகுண்டர் பற்றிய அவதூறு கருத்துக்கள் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு குறித்து பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரைச் சூட்ட வேண்டும். அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழாவை அரசு சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

பா.ஜ.க., திரிபுராவில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. கூடிய விரைவில் தமிழகத்திலும் திராவிட மாயையை உடைத்தெறிந்து பா.ஜ. க., ஆட்சியை பிடிக்கும். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் தோல்வியை சந்தித்துள்ளன. தோன்றிய இடத்திலேயே தோல்வியை கண்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.  இவர்கள் ஊடகங்களால் மட்டுமே உயிர்வாழ்ந்து வருகின்றனர். கம்யூனிஸ்ட்டுகள் கை ஓங்கி உள்ள மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகள் பெரும்பான்மை குறையத் துவங்கி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.  இதில் அரசியலுக்கோ அல்லது மாநிலப் பிரிவினைகளுக்கோ இடமில்லை. இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செந்தொண்டர் பேரணியின் போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினரின்  தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அதில், கம்யூனிஸ்ட்டுகள் மீதும் தவறு உள்ளது. அதனையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்.  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்ககின் போராட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல் உள்ளது போலத் தெரிகிறது. காவல்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தூத்துக்குடியை மற்றொரு போராட்டக்களமாக மாற்றும் முயற்சியில் நக்சல்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!