'ஸ்கூட்டர் திட்டத்தால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்' - சொல்கிறார் அமைச்சர்!

மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என அமைச்சர் ராஜலெட்சுமி தெரிவித்தார். 

அமைச்சர் ராஜலெட்சுமி

மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு, 24,95,687 ரூபாய் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய அமைச்சர் ராஜலெட்சுமி, ‘’பெண்களின் நலனுக்காகவும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்திடும் வகையில் ஜெயலலிதா நிறையத் திட்டங்களை செயல்படுத்தினார். அதன்படி, வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் சொந்தமாக தொழில் செய்து உழைக்கும் பெண்கள் சுதந்திரமாகவும், விரைவாகவும் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும், குழந்தைகளைப் பள்ளிக் கூடத்துக்கு அழைத்துச் செல்லவும் 50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்கள். 

அந்தத் திட்டத்தை தற்போது அரசு செயல்படுத்தி இருக்கிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன் அடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் 4455 மகளிருக்கு மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் சுயசார்புடன் வாழவும் தன்னம்பிக்கையுடன் வாழவும் வழி கிடைத்துள்ளது.

இப்போது நடைபெறும் விழாவில் முதல் கட்டமாக மாநகராட்சி பகுதியில் 8 பேர், நகராட்சி பகுதிகளில் 14 பேர், பேரூராட்சி பகுதிகளில் 34 பேர், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இருந்து 44 பேர் என மொத்தம் 100 உழைக்கும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.24.96 லட்சம் மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அடுத்தடுத்து வழங்கப்படும். இந்த வாகனங்களைப் பயன்படுத்தி பெண்கள் தங்களது பணிகளையும், தொழில்களையும் சிறப்பாக செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்’’ என்றார். 

இந்த விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல்முருகன், டான்பெட் துணைத் தலைவர் கண்ணன், ஆவின் சேர்மன் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!