வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (04/03/2018)

பகல் நேரத்திலேயே ஊருக்குள் உலா வரும் சிறுத்தை - அச்சத்தில் பொதுமக்கள்! 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

சிறுத்தை

நெல்லை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணைக்கு அருகே பொதுமக்களின் குடியிருப்புக்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், மலையின் அடிவாரத்தில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்தப் பகுதியை சுற்றிலும் உள்ள வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான்கள், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் சுலபமாகக் கிடைத்து வந்தது. அதனால் விலங்குகள் ஊருக்குள் நுழைவது முற்றிலுமாக தடைப்பட்டு இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது கோடைகாலம் நெருங்கும் சூழலில், வனப்பகுதிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. குண்டாறு அணை முழுமையாக வறண்டு குட்டை போலக் கிடக்கிறது. வனத்தின் உள்ளேயும் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது.

அதனால் கடந்த சில தினங்களாக குண்டாறு அணையைச் சுற்றிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தாகத்தில் அலையும் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதாக மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மணிகண்டன் என்பவரின் குடியிருப்பில் நுழைந்த சிறுத்தை அங்கு காவலுக்கு இருந்த நாயை கடித்துள்ளது. இதில் நாய் கதறியதில் மணிகண்டனும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் எழுந்து வந்து பார்த்துள்ளனர். அதனால் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது. 

இந்த நிலையில், பகல் நேரத்திலும் ஊருக்கு அருகில் சிறுத்தை நடமாடி வருவதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதனால் விளை நிலங்களுக்குக் கூட அவர்கள் செல்வதற்கு அஞ்சும் நிலைமை உள்ளது. இருட்டுவதற்கு முன்பாகவே விளை நிலங்களில் இருந்து வீடு திரும்பும் மக்கள், வீட்டை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருக்கிறார்கள். அதனால் செங்கோட்டையைச் சுற்றிலும் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க வனத்துறை ஏற்பாடு செய்வதுடன், குண்டாறு பகுதியில் மின்வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.