“தேடித்திரிவோம் வா” - நூல் வெளியிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தொல்லியல் சார்ந்து எழுதிய படைப்புகளைத் “தேடித்திரிவோம் வா” என்ற பெயரில் நூலாக உருவாக்கியுள்ளனர். இதன் வெளியிட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவர்கள்

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களின் பெயர்க் காரணங்கள், கிராமக்கோயில்கள் வரலாறு, வழிபாட்டு முறைகள், கிராமத்துப் பாடல்கள், புதிய வரலாற்றுத் தடயங்கள் பற்றி களஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களைத் திரட்டி கட்டுரைகளாக எழுதி உள்ளார்கள். இதில் 12 மாணவ, மாணவிகளின் 14  கட்டுரைகளையும், இம்மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு எழுதிய 1 கட்டுரையையும் தொகுத்து “தேடித்திரிவோம் வா” எனும் பெயரில் நூலாக உருவாக்கி உள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் இந்த நூலினை அறிமுகம் செய்யும் விழா நேற்று நடைபெற்றது. 

தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தலைமை வகித்தார். மாணவி பா.அபர்ணா வரவேற்றார். மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர், தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் மாணவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து வெளியிட்டார். முதல் படைப்பை  ராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் பா.ஆசைத்தம்பி பெற்றுக்கொண்டார். இந்நூலில் கட்டுரை எழுதிய 12 மாணவ, மாணவியருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகள் மு.விசாலி, மு.அபிநயா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, பள்ளபச்சேரி, பொக்கனாரேந்தல், பால்கரை, உத்தரவை, தாதனேந்தல், கீழப்புதுக்குடி, கோரைக்குட்டம், பஞ்சந்தாங்கி, முத்துவீரப்பன்வலசை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!