வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (05/03/2018)

கடைசி தொடர்பு:01:30 (05/03/2018)

பாம்பன் பாலத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிக்க திட்டம் - பொறியாளர்கள் ஆய்வு!

பாம்பன் பாலத்தில் செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க, தூக்கு பாலத்தினை தாங்கியுள்ள தூண்களின் உறுதி திறன் குறித்து ரயில்வே துறை முதன்மை பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கையினை பொறுத்து தற்போது உள்ள தூண்கள் மாற்றி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

பாம்பன்


நூற்றாண்டுகளை கடந்தும் கடலின் மீது கம்பீரமாக ரயில் பயணத்திற்கு உதவி வருவது பாம்பன் ரயில் பாலம். மீட்டர் கேஜ் பாதையாக இருந்து வந்த இந்த பாலம் கடந்த 2006-ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது பாம்பன் தூக்கு பாலத்தின் தாங்கும் திறனை அதிகரிப்பதற்காக கடலின் நடுவே கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு நடு பாலத்தில் 15 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் காலங்களில் ரயில்களின் வேகத்தினை அதிகபடுத்தவும், ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் தென்னக இரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது பாலத்தின் ஊடாக கப்பல்கள் செல்ல ஏதுவாக உள்ள ஹெர்சர் தூக்கு பாலத்திற்கு மாற்றாக இயந்திரத்தின் மூலம் இயக்கப்படும் புதிய நவீன பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அமைந்துள்ள தூண்களின் உறுதி தன்மையை அதிகரிப்பது குறித்து லக்னோ மத்திய முதன்மை பொறியாளர் குழு  கடந்த நான்கு நாட்களாக நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு பாலத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரயில் தூக்கு பாலத்தின் திறன் மற்றும் அதிர்வு குறித்து எக்கோ சவுன்ட்  மற்றும் கணிணி தொழில் நுட்பக்கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உள்ள தூண்களில் துளையிட்டு அதன் அடர்த்தி மற்றும் உறுதி தன்மை குறித்து எடுக்கப்படும். இதன்மூலம் தயார் செய்யப்படும் இறுதி ஆய்வு அறிக்கையை கொண்டு மத்திய ரயில்வே துறையின் கட்டுமான துறை புதிய பில்லர்கள் அமைக்க வேண்டுமா அல்லது பழைய தூண்களை பயன்படுத்தி ரயில்களை இயக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.