பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு... மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணியின் சார்பில் சென்னையில்  பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வகை செய்யும் சட்டத்தை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

STALIN

விழாவில் ஸ்டாலின்  பேகையில், ''மகளிர் உரிமைகளுக்காக 1928 ஆம் ஆண்டில் குரல் கொடுத்த திராவிட இயக்கத்திலிருந்து வந்திருக்கும் இயக்கம் என்பதோடு அல்லாமல், பெண்களுக்கு வாக்குரிமையையும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுத் தந்த இயக்கம் என்கிற உரிமையோடு, 1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சீர்திருத்த மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்கிற தீர்மானத்தை 1989 இல் தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய போது, “தந்தை சொன்னதை தனயன் நிறைவேற்றுகிறேன். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என இவற்றையெல்லாம் நிறைவேற்றிய இயக்கம் திமுக.

சென்னையில் சமீபத்தில் ஐ.டி பெண் ஊழியர் லாவண்யாவிற்கு நிகழ்ந்த கொடுமையை அனைவரும் அறிவோம். போராடுகிற குணம் படைத்த அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தேன். அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்ற நேரத்தில் அவருடைய மன தைரியம் என்னை பிரம்மிக்கச் செய்தது. தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வில், 2015 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 21 ஆயிரத்து 241.  அது, 2016 ஆம் ஆண்டு 3 இலட்சத்து 38 ஆயிரத்து 954 என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்திருக்கிறது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வந்த பின்னும் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது" என்றார்.

STALIN

மேலும் "கழக மகளிரணி அனைத்து மகளிரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். மகளிர் பாதுகாப்புக்காக “ஹெல்ப் லைன்” ஒன்றையும் உருவாக்க வேண்டும். அதேபோல சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டுமென திமுக தொடர்ந்து பல நிலைகளில் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கு எவ்வித முயற்சியும் ஆளும் அரசாங்கங்கள் எடுக்கவில்லை. குறிப்பாக மத்தியிலே ஆளும் பிரதமர் நரேந்திர மோடி, உலகம் முழுவதும் பயணம் செய்து பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகிறார். ஆனால் இந்தியாவில் நாம் வலியுறுத்தி வரும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முன்வருகிறாரா என்றால் இல்லை. ஆகவே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முன்வாருங்கள். அதுதான் உண்மையிலேயே மகளிருக்கு நீங்கள் செய்யக்கூடிய மரியாதையாக இருக்க முடியும். அப்படி நிறைவேற்றவில்லை எனச்சொன்னால் அதை நிறைவேற்றுவதற்கான எல்லா சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்'' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!