`சாதிரீதியாகச் செயல்படுகிறார் எஸ்.பி.!` - போஸ்டர் ஒட்டிய இருவர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம், கம்பம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
 


தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனது சாதியைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை மட்டும் தனக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான பதவி உயர்வுகளை வழங்குவதாகவும், மாற்று சாதியைச் சேர்ந்தவர்களைச் சம்பந்தமே இல்லாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவதாகவும் குற்றம் சாட்டியே அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில்  `தவறு செய்யாமல் இருந்தபோதும் மாற்றுச் சாதியினரை அடிக்கடி இடம் மாற்றம் செய்யும் மாவட்டக் காவல்துறையே, தனது சாதி நபரான சீனிவாசனையும், அவருக்குத் துணை போகும் காவல் கண்காணிப்பாளரும் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்` என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சீனிவாசன் ஆயுதப்படை ஆய்வாளராக உள்ளார். அவரது படமும் போஸ்டர்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்த போஸ்டர்கள், கம்பம் சட்டமன்ற அலுவலகம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கம்பம் வடக்குக் காவல்துறையினர் விசாரணை செய்து தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த சுரேஷ், சம்சுதீன் ஆகியோரைக் கைது செய்து விசாரணை செய்துவருகிறார்கள். இவை ஒருபுறம் என்றால், ``எஸ்.பி பாஸ்கரன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது முதல் தனது சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரிகளை மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து மாற்றி தனக்கு அருகில் வைத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்த போஸ்டர்களைப் பார்க்க முடிகிறது. புதிதாக வந்திருக்கும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!`` என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!