வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (05/03/2018)

கடைசி தொடர்பு:09:45 (05/03/2018)

சிரியா மக்களுக்காக  மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்! - அன்னவாசலில் இளைஞர்கள் நடத்திய நிகழ்வு 

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி,அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அன்னவாசல்  சிறகுகள் என்ற அமைப்பைச் சேர்ந்த  இளைஞர்கள் பின்னந்தியில் மெழுகுவத்தி ஏந்தி,  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்த எடிசன் என்ற இளைஞர், 'அளவை (அன்னவாசல்)  சிறகுகள்' என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டு  வருகிறார்.சமீபத்தில் இந்தியா வந்த கனடா பிரதமரை ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு வருமாறு பெரிய பேனரை வைத்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் தனது அமைப்பின் சார்பாக சிரியாவில் நடந்துவரும் மனிதத் தன்மையற்ற நடவடிக்கைகளைக் கண்டித்து,நேற்று பேருந்து நிலையம் அருகே இளைஞர்களைத் திரட்டி கைகளில் மெழுகுவத்தி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொடுமையான முறையில்  பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதிகள், உணவுப்பொருள்கள் உள்ளிட்ட மனிதநேயம்  அடிப்படையிலான உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு உலகநாடுகளும் ஐநா சபையும் துரித  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி  கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு, அனைவரும் கைகளில் மெழுகுவத்தி  ஏந்தி, அந்த நாட்டில் கொல்லப்பட்ட எண்ணற்றக் குழந்தைகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் ஐந்து நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து எடிசன் கூறுகையில், "உலகில் எந்த நாட்டில் உள்நாட்டுப் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் உலகநாடுகள் பதறுகிறதோ இல்லையோ... முதல் குரலாக இந்தியா குரல் எழுப்பும்.அதிலும் தமிழர்கள் முந்திக்கொண்டு குரல் கொடுப்பார்கள். இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் காட்டிலும்  மிகக் கொடுமையான முறையில் சிரியாவில் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். கொடுங்கொடுமையாகக் குழந்தைகள் குண்டுகள் தாக்குதலிலும் கட்டட இடிபாடுகளிலும்  சிக்கி இறப்பதைப் பார்க்கும்போது மனசு பதறுகிறது. அந்தக் குழந்தைகளைக் கொல்லப்படுவதை எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாது. எந்த நாட்டுக் குழந்தைகள் என்றாலும் அவர்கள் மதத்தையும் இனத்தையும் கடந்தவர்கள்.அவர்கள் குரல் உலக அரங்கத்தை எட்டியதோ இல்லையோ எங்கள் உள்ளத்தை உறுத்தியது. எங்களால் ஆன சிறு முயற்சியாக, இந்த சிறு  ஆர்ப்பாட்டத்தை எங்கள் ஊரிலிருந்து  பதிவு பண்ணியிருக்கிறோம்"என்றார். மாலை நான்கு மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த சுன்னத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தார்கள். போலீஸ் அதற்கு அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.