வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:15:28 (09/07/2018)

ராமேஸ்வரம் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

 தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகிஹித் இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தனது குடும்பத்தினருடன் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பூரணகும்ப வரவேற்பு


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தனது குடும்பத்தினருடன் ஒருநாள் பயணமாக இன்று ராமேஸ்வரம் வந்தார். சென்னையில் இருந்து ரயில் மூலம் இன்று காலை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கவர்னரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் அதிகாரிகள்  வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை நடைபெறும் ஸ்படிகலிங்க தரிசனத்தில் தனது மனைவி மற்றும் பேத்திகளுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்யச் சென்றார். அங்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில் கவர்னருக்கு பூரணகும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னருடன் பிருந்தாவன் ஆசிரமத்தைச் சேர்ந்த விஜய் கோகல் ஜி மகராஜும் உடன் வந்திருந்தார்.

இதன் பின்னர் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோயிலுக்குள் உள்ள 22  தீர்த்தங்களிலும் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வர்தவர்த்தினி அம்மன் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.  இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்திற்கும், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள கவர்னர் இன்று மாலை மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியில் உள்ள இந்தியக் கடலோரக் காவல் படை குடியிருப்புக்குச் சென்று அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தினைத் திறந்து வைக்க உள்ளார்.

வழக்கமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் கவர்னர், ராமேஸ்வரத்தில் தனது சொந்த முறையிலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதையொட்டி ராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.